இந்தியா

கோப்பு படம்.

காதல் தோல்வி ஆத்திரத்தில் வாலிபரால் வெட்டப்பட்ட நர்சிங் மாணவி மரணம்

Published On 2023-09-14 16:26 IST   |   Update On 2023-09-14 16:26:00 IST
  • தலை மற்றும் கழுத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த மாணவி அல்கா பெரும்பாவூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
  • தனது காதல் தோல்வியடைந்த ஆத்திரத்தில் மாணவியை வெட்டி வாலிபர் தற்கொலை செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் குருப்பம்பாடி பகுதியை சேர்ந்த தம்பதி பினு ஜேக்கப்-மஞ்சு. இவர்களது மகள் அல்கா அன்னா பினு (வயது 20). இவர், கொளஞ்சேரியில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார்.

கடந்த 5-ந்தேதி மாணவி அல்கா வீட்டில் இருந்தார். அப்போது அவரது வீட்டுக்குள் இரிங்கோல் பகுதியை சேர்ந்த பசில் (21) என்ற வாலிபர் வந்தார். மாணவியின் வீட்டுக்குள் நுழைந்த அவர் தன்னிடம் இருந்த கத்தியால் மாணவியை வெட்டினார். அதனை தடுத்த மாணவியின் தாத்தா மற்றும் பாட்டிக்கும் வெட்டு விழுந்தது.

இந்த தாக்குதலில் 3 பேரும் காயம் அடைந்தனர். தலை மற்றும் கழுத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த மாணவி அல்கா பெரும்பாவூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு மேல் சிகிச்சைக்காக ஆலுவா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார், வீடு புகுந்து மாணவியை வெட்டிய பசிலை தேடி அவரது வீட்டுக்கு சென்றனர். அப்போது வாலிபர் பசில் தனது வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. மாணவியை வெட்டி விட்டு வாலிபர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்று போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் மாணவியும், வாலிபரும் வெவ்வேறு கல்வி நிறுவனங்களில் படித்து வந்ததும், அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதும், மாணவியை வாலிபர் காதலித்ததும் தெரியவந்தது. இந்த நிலையில் வாலிபருடன் பேசுவதை தவிர்த்து வந்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

ஆகவே தனது காதல் தோல்வியடைந்த ஆத்திரத்தில் மாணவியை வெட்டி வாலிபர் தற்கொலை செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் வாலிபரால் வெட்டப்பட்ட மாணவி அல்கா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News