இந்தியா

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு: தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் 11 பேருக்கு சிகிச்சை

Published On 2023-09-21 05:05 GMT   |   Update On 2023-09-21 05:05 GMT
  • தொற்று பாதித்தவர்களின் தொடர்பில் இருந்ததாக சுமார் 1,200 பேர் கண்டறியப்பட்டனர்.
  • கேரளாவில் நிபா வைரஸ் தொற்று பரவியதற்கான காரணத்தை கண்டறிய 36 வவ்வால்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தது.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் தொற்று பாதிப்புக்கு அடுத்தடுத்து 2 பேர் பலியானார்கள். மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்த 4 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளனர். தொற்று பாதித்தவர்களின் தொடர்பில் இருந்ததாக சுமார் 1,200 பேர் கண்டறியப்பட்டனர்.

அவர்களின் உடல்நிலையை சுகாதாரத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதுவரை 323 பேருக்கு நிபா வைரஸ் தொற்று பாதிப்பு தொடர்பாக மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அவர்களில் 317 பேரின் பரிசோதனை முடிவுகள் நெகட்டிவ் என வந்திருப்பது மாநில சுகாதாரத்துறையினர் மட்டுமின்றி, மக்களுக்கும் நிம்மதியை தந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் தொடங்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் 11 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரளாவில் நிபா வைரஸ் தொற்று பரவியதற்கான காரணத்தை கண்டறிய 36 வவ்வால்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் அதில் வைரஸ் எதுவும் கண்டறியப்படவில்லை என தெரிய வந்துள்ளது.

Tags:    

Similar News