இந்தியா

'மிஸ் இந்தியா' அழகியாக நந்தினி குப்தா தேர்வு

Published On 2023-04-17 08:34 IST   |   Update On 2023-04-17 08:34:00 IST
  • ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது அழகியான நந்தினி குப்தா, ‘மிஸ் இந்தியா’ அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டு மகுடம் சூட்டப்பட்டார்.
  • தன் வாழ்க்கையில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியவர் தொழில் அதிபர் ரத்தன் டாடா என்று நந்தினி குப்தா கூறி உள்ளார்.

மும்பை:

'மிஸ் இந்தியா வேர்ல்ட் 2023' அழகி போட்டியின் இறுதிச்சுற்று மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்தது

இந்த போட்டியில் 'மிஸ் இந்தியா' அழகியாக ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவைச் சேர்ந்த நந்தினி குப்தா தேர்ந்தெடுக்கப்பட்டு மகுடம் சூட்டப்பட்டார்.

இதில் இரண்டாவது இடம் டெல்லியைச் சேர்ந்த ஸ்ரேயா பூஞ்சாவுக்கு கிடைத்துள்ளது. மூன்றாவது இடம், மணிப்பூரைச் சேர்ந்த தவ்னாவ்ஜாம் ஸ்ட்ரேலா லுவாங்குக்கு கிடைத்துள்ளது.

அழகி போட்டி நிகழ்ச்சியில் இந்தி பட உலக நட்சத்திரங்கள் கார்த்திக் ஆர்யன், அனன்யா பாண்டே உள்ளிட்டோர் இடம் பெற்ற நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

முன்னாள் அழகிகள் சினி ஷெட்டி, ரூபல் ஷெகாவத், ஷினட்டா சவுகான், மனசா வாரணாசி, மனிகா சியோகந்த், மான்யா சிங், சுமன்ராவ், ஷிவானி ஜாதவ் ஆகியோர் கண்கவர் உடையில் வந்து பார்வையாளர்களை வசீகரித்தனர்.

'மிஸ் இந்தியா 'அழகியாக மகுடம் சூட்டப்பட்டுள்ள நந்தினி குப்தாவுக்கு வயது 19. இவர் ஒரு மாடல் அழகி ஆவார். நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

தன் வாழ்க்கையில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியவர் தொழில் அதிபர் ரத்தன் டாடா என்று நந்தினி குப்தா கூறி உள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, "மனித குலத்துக்காக எல்லாவற்றையும் செய்வதுடன், சம்பாதிப்பில் பெரும்பகுதியை சமூக பணிகளுக்காக நன்கொடையாக அளிப்பவர். கோடிக்கணக்கான மக்களின் நேசத்துக்கு உரியவர் ரத்தன் டாடா" என தெரிவித்தார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம் நடக்கிற 'மிஸ் வேர்ல்ட்' உலக அழகி போட்டியில் இந்தியாவின் சார்பில் நந்தினி குப்தா கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News