இந்தியா

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு-காங்கிரஸ் கூட்டணி அமைக்க பாரதிய ஜனதாவே காரணம்: பினராயி விஜயன் பேச்சு

Published On 2023-02-13 10:48 IST   |   Update On 2023-02-13 10:56:00 IST
  • கடந்த தேர்தலில் இங்கு பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தது.
  • கேரளாவில் குஸ்தி போடும் கட்சிகள் திரிபுராவில் தோஸ்தாக மாறியுள்ளது.

திருவனந்தபுரம்:

திரிபுரா மாநிலத்தில் வருகிற 16-ந் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது.

60 தொகுதிகளை கொண்ட இந்த மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் தான் மாறி, மாறி ஆட்சி அமைத்து வந்தது. கடந்த தேர்தலில் இங்கு பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தது.

இப்போது நடக்கும் சட்டசபை தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கு வர பாரதிய ஜனதா தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.

பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வருவதை தடுக்க அங்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியும், காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது.

இதனை பாரதிய ஜனதா விமர்சித்து வருகிறது. கேரளாவில் எதிரும், புதிருமாக செயல்படும் கட்சிகள் இங்கு கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பதாக பாரதிய ஜனதா கட்சியினர் கூறினர். கேரளாவில் குஸ்தி போடும் கட்சிகள் திரிபுராவில் தோஸ்தாக மாறியுள்ளது என்றும் கிண்டல் செய்தனர்.

பாரதிய ஜனதாவின் விமர்சனத்திற்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் பதில் அளித்து உள்ளார். இது தொடர்பாக கோட்டயத்தில் நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும், காங்கிரசும் தேர்தல் கூட்டணி அமைத்து கொள்ள பாரதிய ஜனதாவே காரணம். பாரதிய ஜனதாவின் நடவடிக்கைகள் காரணமாகவே காங்கிரசுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கைகோர்த்துள்ளது.

திரிபுராவில் பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது. அதற்காகவே அங்கு நாங்கள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறோம், என்றார்.

Tags:    

Similar News