இந்தியா

விமானத்தில் ஆடைகளை கழற்றி வீசி விமான ஊழியர்களுடன் தகராறில் ஈடுபட்ட இத்தாலி பெண் பயணி கைது

Published On 2023-01-31 16:38 IST   |   Update On 2023-01-31 16:38:00 IST
  • இத்தாலி பெண், திடீரென தனது ஆடைகளை கழற்றி வீசிவிட்டு விமானத்தில் அங்கும், இங்கும் சுற்றிவந்தார்.
  • விமானத்தில் இருந்த மற்ற பயணிகள் மன உளைச்சலுக்கு ஆளானார்கள்.

மும்பை:

வளைகுடா நாடான அபுதாபியில் இருந்து மும்பைக்கு ஒரு தனியார் விமானம் வந்தது.

இதில் இத்தாலி நாட்டை சேர்ந்த பெண் பயணி ஒருவர் பயணம் செய்தார். எக்னாமி வகுப்பு டிக்கெட் எடுத்திருந்த அவர் பிசினஸ் வகுப்பு இருக்கைக்கு செல்ல முயன்றார். அவரை விமான ஊழியர்கள் தடுத்து நிறுத்தி அவருக்கு உரிய இருக்கைக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பயணி, விமான ஊழியர்களுடன் தகராறில் ஈடுபட்டார். மேலும் ஊழியர் ஒருவரின் முகத்திலும் குத்துவிட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர் இதுபற்றி விமான பைலட்டிடம் புகார் கூறினார். அவர் இத்தாலி பெண்ணை சமாதானம் செய்ய முயன்றார்.

ஆனால் அந்த பெண், திடீரென தனது ஆடைகளை கழற்றி வீசிவிட்டு விமானத்தில் அங்கும், இங்கும் சுற்றிவந்தார். இதனால் விமானத்தில் இருந்த மற்ற பயணிகள் மன உளைச்சலுக்கு ஆளானார்கள்.

இதையடுத்து விமானம் மும்பையில் தரை இறங்கியதும், விமான ஊழியர்கள் விமான பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளிடம் புகார் செய்தனர். அவர்கள் இதுபற்றி விசாரணை நடத்தி மும்பை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அவர்கள் விரைந்து வந்து விமானத்தில் அநாகரீகமாக நடந்து கொண்ட இத்தாலி பெண் பயணியை கைது செய்தனர். பின்னர் அவரது பாஸ்போர்டை கைப்பற்றி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இந்த சம்பவத்தால் மும்பை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News