இந்தியா

பாறையில் ஓங்கி அடித்து கொலை செய்யப்பட்ட குழந்தை நிகில்.

மனைவியின் நடத்தை சந்தேகத்தால் 3 மாத ஆண் குழந்தையை பாறையில் ஓங்கி அடித்து கொன்ற தந்தை

Published On 2022-11-26 11:50 IST   |   Update On 2022-11-26 11:50:00 IST
  • சுவாதி தனது கணவரிடம் குழந்தையை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லாததால் உடல்நிலை மோசமடைந்து வருவதாக கூறினார்.
  • கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

திருப்பதி:

ஆந்திர மாநிலம் காளஹஸ்தி வாட்டர் ஹவுஸ் நகரை சேர்ந்தவர் முனிராஜா (வயது 22). கூலி தொழிலாளி. இவரது மனைவி சுவாதி (19). தம்பதிக்கு நிகில் என்ற 3 மாத ஆண் குழந்தை இருந்தது. மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த முனி ராஜா சுவாதியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் நிக்கிலுக்கு கடந்த 4 நாட்களாக உடல்நிலை சரி இல்லாமல் இருந்தது. குழந்தையை டாக்டரிடம் அழைத்துச் செல்ல வேண்டும் என சுவாதி கணவரிடம் தெரிவித்தார். ஆனால் அவர் குழந்தையை டாக்டரிடம் அழைத்துச் செல்லாமல் காலம் கடத்தி வந்தார்.

இன்று அதிகாலை சுவாதி தனது கணவரிடம் குழந்தையை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லாததால் உடல்நிலை மோசமடைந்து வருவதாக கூறினார். அப்போது கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

மகன் உயிருடன் இருந்தால்தானே ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல கூறுவாய் என ஆத்திரமடைந்து தூங்கிக் கொண்டிருந்த குழந்தையின் 2 கால்களையும் பிடித்து வெளியே தூக்கி வந்து அருகில் இருந்த பாறையில் ஓங்கி அடித்தார். இதில் குழந்தையின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதனை கண்ட சுவாதி கதறி துடித்தார்.

முனிராஜா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். சுவாதி குழந்தையை தூக்கிக் கொண்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார்.

ஆஸ்பத்திரியில் குழந்தையை பரிசோதித்த டாக்டர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதனை கேட்ட சுவாதி அங்கேயே மயக்கம் அடைந்து விழுந்தார்.

இதையடுத்து டாக்டர்கள் சுவாதிக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த காளஹஸ்தி போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள முனிராஜை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News