இந்தியா

பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்ய ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய டாக்டர் கைது

Published On 2023-07-12 03:39 GMT   |   Update On 2023-07-12 03:39 GMT
  • லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியபடி ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுக்களை டாக்டரிடம் கொடுக்க சென்றனர்.
  • டாக்டர் ஷெர்ரி ஐசக் பணத்தை வாங்கியபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த வாரம் விபத்தில் சிக்கி காயம் அடைந்தார். இதையடுத்து அவர் திருச்சூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

விபத்தில் அந்த பெண்ணுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருந்ததால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. இதனால் திருச்சூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ஷெர்ரி ஐசக்கை பெண்ணின் குடும்பத்தினர் தொடர்பு கொண்டனர்.

அப்போது அவர், அறுவை சிகிச்சை செய்ய ரூ.3 ஆயிரம் லஞ்சம் தருமாறு கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் குடும்பத்தினர் லஞ்சம் கொடுக்க மறுத்தனர். இதனால் அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்யாமல் டாக்டர் ஷெர்ரி ஐசக் காலதாமதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

அறுவை சிகிச்சை செய்ய டாக்டர் லஞ்சம் கேட்பது குறித்து திருச்சூர் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜிம்பாலிடம் பெண்ணின் குடும்பத்தினர் புகார் செய்தனர். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியபடி ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுக்களை டாக்டரிடம் கொடுக்க சென்றனர்.

ஒட்டுப்பாறையில் உள்ள டாக்டர் ஷெர்ரி ஐசக் நடத்தி வரும் தனியார் மருத்துவமனைக்கு சென்றனர். அங்கிருந்த டாக்டரிடம் ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுக்களை கொடுத்தனர். அதனை டாக்டர் ஷெர்ரி ஐசக் வாங்கியபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இதையடுத்து முழங்குனத்துகாவில் உள்ள டாக்டரின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் இருந்த ரூ15.25 லஞ்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுக்கள் இருந்தன. அவற்றை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் காயமடைந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்ய லஞ்சம் வாங்கி சிக்கிய டாக்டர் ஷெர்ரி ஐசக் தனது துறையில் 25 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News