இந்தியா

ராகுல்காந்தி அலுவலகம் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு- கேரள சட்டசபை ஒத்திவைப்பு

Published On 2022-06-27 09:46 GMT   |   Update On 2022-06-27 09:46 GMT
  • காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பியபடி இருந்தனர்.
  • காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், தொடர்ந்து கூச்சலிட்டபடி இருந்ததால் சபை நடவடிக்கைகள் அனைத்தும் முடங்கியது.

திருவனந்தபுரம்:

கேரள சட்டசபையின் 15-வது கூட்ட தொடர் இன்று தொடங்கியது.

இக்கூட்டத்தில் வயநாடு தொகுதி எம்.பி. ராகுல்காந்தியின் அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கிளப்ப காங்கிரசார் திட்டமிட்டு இருந்தனர்.

அதன்படி கூட்டம் தொடங்கியதும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சபையின் மைய பகுதிக்கு சென்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு அமைப்பின் மாணவர் அமைப்பான எஸ்.எப்.ஐ. நிர்வாகிகளை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

அவர்களை சபாநாயகர் இருக்கையில் அமரும்படி கூறினார். ஆனால் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தொடர்ந்து கோஷமிட்டபடி இருந்தனர்.

இதையடுத்து சபாநாயகர் சபை நடவடிக்கைகளை தொடங்குவதாக அறிவித்தார். மேலும் கேள்வி நேரம் உடனே தொடங்குவதாக அறிவித்தார். ஆனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பியபடி இருந்தனர். மேலும் கம்யூனிஸ்டு கட்சியினரை கண்டித்து பதாகைகளையும் காண்பித்தனர்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், தொடர்ந்து கூச்சலிட்டபடி இருந்ததால் சபை நடவடிக்கைகள் அனைத்தும் முடங்கியது.

இதையடுத்து சபாநாயகர் ராஜேஷ் சபையை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.சபை தொடங்கிய முதல் நாளிலேயே ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News