இந்தியா

சோழர்கால கோவிலில் புதையல் இருப்பதாக நள்ளிரவில் பள்ளம் தோண்டிய கும்பல்

Published On 2022-10-18 12:08 IST   |   Update On 2022-10-18 12:08:00 IST
  • நந்தி சிலை மற்றும் சிவலிங்கம் சேதப்படுத்தப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம் பிரகாச மாவட்டம் நாகுல்ல புறப்பாடு மண்டலம் கணபர்தி பகுதியில் பழமை வாய்ந்த சோழர் காலத்தில் கட்டப்பட்ட பிரம்மாண்ட ஏலேஸ்வரர் கோவில் உள்ளது. சோழர் காலத்தில் கட்டப்பட்ட கோவில் என்பதால் கோவிலுக்குள் தங்கப் புதையல் இருப்பதாக அப்பகுதி மக்கள் கருதி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் அங்கு காரில் வந்த மர்ம கும்பல் கருவறைக்கு முன்பாக உள்ள பிரம்மாண்ட நந்தி சிலைக்கு அடியில் தங்க புதையல் இருப்பதாக எண்ணி கடப்பாறை மற்றும் இரும்பு ராடுகளைக் கொண்டு சிலையை கீழே தள்ளினர்.

பின்னர் சிலைக்கு அடியில் பெரிய அளவில் ஆழமாக பள்ளம் தோண்டினர். நந்தி சிலைக்கு அடியில் புதையல் எதுவும் கிடைக்கவில்லை.

இதையடுத்து கருவறைக்கு சென்ற கொள்ளை கும்பல் அங்கிருந்த மூலவர் சிவலிங்கத்தை பீடத்தில் இருந்து எடுத்துவிட்டு பள்ளம் தோண்டினர். அங்கும் புதையல் எதுவும் இல்லை.

இதனால் ஆத்திரமடைந்த கும்பல் நந்தி மற்றும் சாமி சிலையை உடைத்து சேதப்படுத்தி விட்டு மீண்டும் காரில் ஏறி தப்பிச் சென்றனர்.

காலை வழக்கம் போல் சிவாச்சாரியார்கள் கோவிலை திறக்க வந்தனர். அப்போது நந்தி சிலை மற்றும் சிவலிங்கம் சேதப்படுத்தப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து கோவில் நிர்வாக அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது நள்ளிரவு 1 மணி அளவில் மர்ம கும்பல் காரில் வந்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News