இந்தியா

தேர்தல் அதிகாரிகள் ஆட்டோவை தடுத்து நிறுத்திய போது ரூ.88 ஆயிரத்தை நடுரோட்டில் வீசி சென்ற கும்பல்

Published On 2023-03-05 08:29 GMT   |   Update On 2023-03-05 08:29 GMT
  • சுங்க சாவடியில் தேர்தல் கண்காணிப்பாளர்கள் தில்லேஸ்வரராவ், கிருஷ்ணாராவ் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து சாலையில் பணத்தை வீசி சென்றவர்கள் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பதி:

ஆந்திர மாநிலத்தில் தற்போது எம்.எல்.சி. தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சியினர் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஸ்ரீகாகுளத்தில் இருந்து நரசன்னபேட்டை வழியாக மடபம் சுங்கசாவடி நோக்கி இரவில் ஆட்டோ வேகமாக வந்தது.

அப்போது சுங்க சாவடியில் தேர்தல் கண்காணிப்பாளர்கள் தில்லேஸ்வரராவ், கிருஷ்ணாராவ் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். இதனைக் கண்ட ஆட்டோவில் இருந்தவர்கள் தங்களிடம் இருந்த 500 ரூபாய் நோட்டுக்களை சாலையில் வீசிவிட்டு ஆட்டோவை நிறுத்தாமல் வேகமாக சென்றனர். இதனைக் கண்ட சுங்க சாவடி ஊழியர்கள் ஆட்டோவை பிடிக்க துரத்திச் சென்றனர்.

ஆனால் ஆட்டோ வேகமாக சென்று இருட்டில் மறைந்தது.500 ரூபாய் நோட்டுகள் சாலையில் சிதறி கிடப்பதை கண்ட அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்திவிட்டு ஓடிச் சென்று பணத்தை எடுத்தனர்.

இதனைக் கண்ட தேர்தல் கண்காணிப்பாளர்கள் சாலையில் இருந்த பணத்தையும் வாகன ஓட்டிகள் எடுத்த பணத்தையும் பறிமுதல் செய்தனர். அதில் ரூ.88 ஆயிரம் இருந்தது.

இதையடுத்து பணத்தை ஸ்ரீ காகுளம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து சாலையில் பணத்தை வீசி சென்றவர்கள் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News