இந்தியா

வங்கியில் அடகு வைத்த ரூ.4½ கோடி நகைகள் மாயம்: வங்கி துணை பெண் மேலாளர் தற்கொலை

Published On 2023-12-01 11:41 IST   |   Update On 2023-12-01 11:41:00 IST
  • நகை அடகு வைத்த வாடிக்கையாளர்கள் வங்கி முன்பாக குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • ஸ்வப்ன பிரியாவின் தாய் தனது மகள் மீது போலீசில் புகார் செய்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக புகார் செய்தார்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் காரா மண்டலத்தில் பாரத ஸ்டேட் வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியின் துணை மேலாளராக ஸ்வ்ப்ன பிரியா என்பவர் வேலை செய்து வந்தார்.

இந்த வங்கியில் சுற்றுவட்ட கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தங்க நகைகளை அடகு வைத்து இருந்தனர்.

இந்த நிலையில் கடந்த வாரம் சில வாடிக்கையாளர்கள் நகை கடனுக்கான பணத்தை திருப்பி செலுத்தி நகையை கேட்டனர்.

அப்போது வங்கி லாக்கரில் வைக்கப்பட்டு இருந்த நகைகள் காணாமல் போனது தெரிய வந்தது. சுமார் 2400 பேர் அடகு வைத்த நகைகள் காணாமல் போனதாக சந்தேகிக்கப்படுகிறது. காணாமல் போன நகைகளின் மதிப்பு ரூ. 4½ கோடி என கூறப்படுகிறது.

இந்த தகவல் காட்டுத்தீயாக வங்கி வாடிக்கையாளர்களுக்கு பரவியது.

நகை அடகு வைத்த வாடிக்கையாளர்கள் வங்கி முன்பாக குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வங்கி துணை மேலாளர் ஸ்வப்ன பிரியா விடுமுறையில் சென்றார்.

வாடிக்கையாளர்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து மண்டல மேலாளர் ராஜு போலீசில் புகார் செய்தார். வங்கியில் அடகு வைத்த நகைகள் காணாமல் போனதற்கு வங்கி ஊழியர்கள் 6 பேர் காரணம் என கூறப்படுகிறது.

போலீசில் புகார் செய்யப்பட்டதால் துணை மேலாளர் ஸ்வப்ன பிரியா விஷம் குடித்துவிட்டு மயங்கி கிடந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக விசாகப்பட்டனத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிர் இழந்தார்.

இது குறித்து ஸ்வப்ன பிரியாவின் தாய் தனது மகள் மீது போலீசில் புகார் செய்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக புகார் செய்தார்.

வங்கியில் காணாமல் போன நகைகள் குறித்து கணக்கு எடுக்கப்பட்டு வருவதாகவும், கணக்கெடுப்பு முடிந்த பிறகு வாடிக்கையாளர்களின் நகைகள் திருப்பித் தரப்படும் என மண்டல மேலாளர் ராஜு தெரிவித்தார்.

Tags:    

Similar News