இந்தியா

அவதூறு வழக்கு: ராகுல் காந்தியின் தண்டனையை நிறுத்திவைக்க சூரத் நீதிமன்றம் மறுப்பு

Published On 2023-04-20 11:23 IST   |   Update On 2023-04-20 11:54:00 IST
  • 3-ந்தேதி சூரத் மாவட்ட கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நேரில் ஆஜராகி மேல்முறையீடு செய்தார்.
  • ராகுல் காந்தியின் மனு மீது கடந்த 13-ந்தேதி விசாரணை நடைபெற்றது.

சூரத்:

கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது, கர்நாடக மாநிலம் கோலாரில் பிரசாரம் செய்த ராகுல் காந்தி மோடி என்ற பெயர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் சூரத் மாவட்ட தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. இதனையடுத்து ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.

இந்நிலையில் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி ராகுல்காந்தி கடந்த 3-ந்தேதி சூரத் மாவட்ட கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நேரில் ஆஜராகி மேல்முறையீடு செய்தார். அப்போது அவரது ஜாமீனை நீட்டித்தும், 2 ஆண்டு சிறைத்தண்டனையை நிறுத்தி வைத்தும் நீதிபதி ஆர்.பி. மோகேரா உத்தரவிட்டார்.

அதன்பின்னர் ராகுல் காந்தியின் மனு மீது கடந்த 13-ந்தேதி விசாரணை நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி ஆர்.பி. மோகேரா, தீர்ப்பை ஒத்திவைத்தார். அதன்படி இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அப்போது, ராகுல் காந்தியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதி, சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்கவும் மறுத்துவிட்டார். இதனால், ராகுல் காந்தியின் தகுதிநீக்கம் நீடிக்கிறது.

அதேசமயம் தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி தாக்கல் செய்த பிரதான மனு மீது விசாரணை தொடர்ந்து நடைபெறும்.

Tags:    

Similar News