இந்தியா

தேசதுரோக வழக்கை 5 அல்லது 7 நீதிபதி அமர்வு விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

Published On 2023-09-12 10:05 GMT   |   Update On 2023-09-12 10:05 GMT
  • 1962 கேதர்நாத் வழக்கில் இந்த சட்டம் செல்லுபடியாகும் என தீர்ப்பு வந்தது
  • 2022 மே மாதம், புதிய வழக்குகளை பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டது

இந்தியாவை பிரிட்டிஷார் ஆண்டு வந்த போது 1860ல் இந்திய தண்டனை சட்டத்தை (IPC) உருவாக்கினர். அப்போது இந்தியர்களை அடக்கி ஆளும் விதமாக 124ஏ எனும் பிரிவை சேர்த்தனர். அதன்படி, அரசாங்கத்தை எதிர்த்து கூறப்படும் கருத்துக்களுக்காகவும், அரசாங்கத்தை மாற்றக்கோரும் கோரிக்கைகளுக்கும் "தேசத்துரோகம்" என குற்றம்சாட்டப்பட்டு கிரிமினல் குற்ற வழக்கு பதிவு செய்ய வழிவகை உருவானது. இதன் மூலம் எண்ணற்ற பேர் சிறை தண்டனைக்கு உள்ளாகினர்.

சுதந்திர இந்தியாவில் இதனை எதிர்த்து தொடுக்கப்பட்ட "கேதர்நாத் மற்றும் பீகார் மாநிலம்" எனும் பிரபலமான வழக்கின் 1962 தீர்ப்பில், 5 நீதிபதிகள் கொண்ட அமர்வும் இந்த சட்டம் செல்லும் என தீர்ப்பளித்தது.

இந்நிலையில், 2021ல் கிஷோர்சந்திர வாங்கெம்சா மற்றும் கன்ஹையா லால் சுக்லா ஆகியோர் இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 124ஏ பிரிவை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரணைக்கு உகந்ததாகக் கூறி உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

கடந்த மே 2022ல், இந்த சட்டப்பிரிவில் புதிதாக எந்த வழக்கையும் மாநில மற்றும் மத்திய அரசாங்கங்கள் பதிவு செய்யக்கூடாது என உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது மத்திய அரசு சார்பில் வாதிட்ட அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி மற்றும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோர் இந்திய தண்டனை சட்டத்திற்கு மாற்றாக "பாரதிய நியாய சம்ஹிதை" எனும் புது தண்டனை சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவிருப்பதால் இதன் விசாரணையை ஒத்திவைக்குமாறு கோரிக்கை வைத்தனர்.

ஆனால், இதனை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி. பர்டிவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகிய 3 நீதிபதிகளை கொண்ட அமர்வு, புது சட்டம் வந்தாலும் அது பழைய வழக்குகளையோ தீர்ப்புகளையோ பாதிக்காது என்று கூறி, இந்த வழக்கில் பல அம்சங்கள் விசாரிக்கப்பட வேண்டி உள்ளதால், இதனை குறைந்தது 5 நீதிபதிகளையோ அல்லது 7 நீதிபதிகளையோ கொண்ட ஒரு அரசியலமைப்பு அமர்வு விசாரிக்க வேண்டும் என கூறி உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News