இந்தியா

வெயில் தாக்கம் எதிரொலி: கர்நாடகாவில் 9 மாவட்டங்களில் அரசு அலுவலக நேரம் மாற்றம்

Published On 2025-04-03 10:31 IST   |   Update On 2025-04-03 10:31:00 IST
  • பகல் நேரத்தில் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத நிலை உள்ளது.
  • மே மாதம் 31-ந்தேதி வரை அமலில் இருக்கும்.

பெங்களூரு:

கர்நாடகத்தில் தற்போது நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக வடகர்நாடகத்தில் உள்ள விஜயாப்புரா, பாகல்கோட்டை, ராய்ச்சூர், கதக், கலபுரகி உள்ளிட்ட மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரித்து வருகிறது.

கோடை காலத்தில் வடகர்நாடக மாவட்டங்களில் அரசு ஊழியர்களின் பணி நேரம் மாற்றி அமைக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கலபுரகி, ராய்ச்சூர், யாதகிரி, பீதர், கொப்பல், பல்லாரி, விஜயநகர், விஜயாப்புரா, பாகல்கோட்டை ஆகிய 9 மாவட்டங்களில் கடுமையான வெயிலின் தாக்கத்தால் மக்கள் அவதியுற்று வருகிறார்கள்.

வெயில் வாட்டி வதைத்து வருவதால் பகல் நேரத்தில் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத நிலை உள்ளது. வெயில் நேரத்தில் பொது மக்கள் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என்று அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

இதையடுத்து அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களின் நலன் கருதி அலுவலக பணி நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட 9 மாவட்டங்களில் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் காலை 8 மணி முதல் மதியம் 1.30 மணி வரை மட்டும் பணியாற்றினால் போதும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும், மே மாதம் 31-ந்தேதி வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News