இந்தியா

சிறைக்கைதிகளுக்கு ரூ.5 கோடி வழங்க சுகேஷ் சந்திரசேகர் விருப்பம்: அனுமதி கேட்டு டி.ஜி.பி.க்கு கடிதம்

Published On 2023-03-23 03:09 GMT   |   Update On 2023-03-23 03:09 GMT
  • ஜாமீனுக்கு பணம் செலுத்த வசதி இல்லாத கைதிகளைப் பார்க்கும்போது எனது இதயம் வலிக்கிறது.
  • 400-க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் ஜாமீன் பெற உதவி இருப்பதாக கூறப்படுகிறது.

புதுடெல்லி :

பல்வேறு மோசடி வழக்குகளில் சிக்கி டெல்லி மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டுள்ள மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் சிறைத்துறை டி.ஜி.பி.க்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

கைதிகளுக்கு உதவும் விஷயத்தில் நீதித்துறை பல முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆனால் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள விசாரணைக் கைதிகளின் குடும்பங்களுக்கு உதவ முயற்சி எடுக்கவில்லை. அன்பான உறவுகள் சிறையில் இருப்பதால் பல குடும்பங்களில் தற்கொலைகள் நடப்பதை நான் பார்த்திருக்கிறேன். எனவே, உறவுகளிடம் இருந்து விலகி இருக்கும் கைதிகளுக்கு ஒரு மனிதனாக ரூ.5 கோடியே 11 லட்சம் நிதி வழங்க இருக்கிறேன்.

இது முறையான வருவாய் மூலம் வந்த நிதியாகும். குற்றப்பின்னணியில் வந்தது அல்ல. அதற்கான ஆதாரங்களை காட்டுகிறேன். மார்ச் 25-ந் தேதி என்னுடைய பிறந்தநாள் என்பதால் எனது பிறந்தநாள் பரிசாக இந்த சிறிய தொகையை ஏற்றுக்கொண்டால் மகிழ்ச்சி அடைவேன்.

தென்னிந்தியாவில் லட்சக்கணக்கான பேருக்கு உணவளிக்கும் சாரதாம்மா தொண்டு நிறுவனம் மற்றும் சந்திரசேகர் புற்றுநோய் அறக்கட்டளை மூலம் பல நலத்திட்டங்களில் நானும், என் குடும்பத்தினரும் ஈடுபட்டுள்ளோம். ஏழை நோயாளிகளுக்கு மாதம்தோறும் இலவச ஹீமோதெரபியும் அளிக்கிறோம். ஜாமீனுக்கு பணம் செலுத்த வசதி இல்லாத கைதிகளைப் பார்க்கும்போது எனது இதயம் வலிக்கிறது. அவர்கள் நீண்டகாலமாக சிறையில் இருப்பதால் குடும்பங்களுக்கு பணம் கொடுக்க முடியவில்லை. எனவே நான் என்னால் இயன்ற இந்த குறைந்தபட்ச உதவியை செய்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சுகேஷ் சந்திரசேகர் கடந்த 2017-ம் ஆண்டு டெல்லி சிறையில் அடைக்கப்பட்டார். அப்போதிருந்து தற்போதுவரை அவர் 400-க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் ஜாமீன் பெற உதவி இருப்பதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News