இந்தியா

தென்மேற்கு பருவமழை 25-ந்தேதி தொடங்குகிறது: கூடுதல் மழை பெய்ய வாய்ப்பு

Published On 2025-05-21 13:53 IST   |   Update On 2025-05-21 13:54:00 IST
  • தென்மேற்கு பருவமழையை விட வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் தமிழ்நாட்டுக்கு அதிக மழை பொழிவு காணப்படும்.
  • இந்த ஆண்டு ‘எல் நினோ’ போன்ற சூழல் ஏற்பட வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

புதுடெல்லி:

தமிழ்நாட்டுக்கு வடகிழக்கு பருவமழை மற்றும் தென்மேற்கு பருவமழை மூலம் கணிசமான அளவுக்கு மழை நீர் கிடைத்து வருகிறது.

பொதுவாக ஜூன் மாதம் 1-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும். அக்டோபர் மாதம் வரை இந்த பருவமழை நீடிக்கும். அதன் பிறகு வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கும்.

தென்மேற்கு பருவமழையை விட வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் தமிழ்நாட்டுக்கு அதிக மழை பொழிவு காணப்படும்.

இந்த இரு பருவமழையும் பெரும்பாலும் குறிப்பிட்ட நாட்களில் தொடங்கி விடும். சில ஆண்டுகளில் பருவமழை முன்னதாகவே தொடங்கி விடுவது உண்டு. அந்த வகையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சுமார் ஒரு வாரம் முன்னதாக தொடங்கும் என்று தெரிய வந்துள்ளது.

இந்த ஆண்டு வருகிற 27-ந் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கணித்திருந்தது. இப்போது அதில் இருந்தும் 4 நாட்கள் முன்னதாக தொடங்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 25-ந்தேதியே தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் கணிப்பின்படி கேரளத்தில் பருவமழை தொடங்கினால், கடந்த 2009-ம் ஆண்டுக்கு பிறகு மிக முன்கூட்டியே தொடங்கும் பருவமழை இதுவாக இருக்கும். அந்த ஆண்டில் பருவமழை மே 23-ந்தேதி தொடங்கியது.

கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மே மாதம் 30-ந் தேதி தொடங்கியது. 2023-ம் ஆண்டு சற்று தாமதமாக ஜூன் 8-ந்தேதிதான் பருவமழை தொடங்கியது. 2022-ம் ஆண்டும் வழக்கத்தை விட 3 நாட்கள் பின்தங்கி ஜூன் 3-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது.

2021-ம் ஆண்டு மிகச் சரியாக ஜூன் 1-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. தற்போது ஒரு வாரம் முன்னதாக தென்மேற்கு பருவமழை வர இருக்கிறது. இதனால் கோடை வெப்பம் விரைவில் முழுமையாக தணிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கத்தைவிட கூடுதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த ஆண்டு 'எல் நினோ' போன்ற சூழல் ஏற்பட வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

தென்மேற்குப் பருவமழையின் 50 ஆண்டுகால சராசரி மழைப்பொழிவு 87 செ.மீ. ஆகும். 96 முதல் 104 சதவீத மழைப்பொழிவு வழக்கமான மழை என்று கருதப்படும்.

105 முதல் 110 சதவீதம் வரை மழை பெய்து இருந்தால் அது 'வழக்கத்தை விட அதிகம் என்று சொல்வார்கள். 110 சதவீதத்துக்கு மேல் மழைப்பொழிவு இருந்தால் அந்த பருவமழையை 'உபரி' என்று வகைப்படுத்துவார்கள். இந்த ஆண்டு இந்த வகைகளில் ஏதாவது ஒன்றின் அடிப்படையில் கூடுதல் மழை பொழிவு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News