கேரளாவில் நாளை SIR பணியை புறக்கணிக்கும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள்
- வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பகல் இரவாக பணி பார்ப்பதால் மனஅழுத்தம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு.
- மனஅழுத்தம் காரணமாக அலுவலர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், புறக்கணிக்கும் முடிவு.
தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் அரசு பணி ஊழியர்கள் உள்ளிட்டோர் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
ஒரு மாதத்திற்குள் அனைத்து வாக்காளர்களுக்கும் படிவம் வினியோகம் செய்து, அது நிரப்பப்பட்டு சரிபார்க்கப்பட வேண்டும்.
சரியாக ஒரு மாதத்திற்குள் இந்த பணியை முடிக்க வேண்டும் என்பதால் பகல் இரவாக பணியில் ஈடுபட வற்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கண்ணூர் பய்யனூரைச் சேர்ந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர் அனீஷ் ஜார்ஜ் (44) SIR பணியால் மனஅழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கு உடனடியாக தீர்வு காணப்படவில்லை என்றால் அடுத்தக்கட்ட போராட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் செயல் மன்றம், ஆசிரியர் சேவை அமைப்புகளின் கூட்டுக் குழு மற்றும் கேரள அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் சங்கம் நாளை புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளன.
கேரள மாநில தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி போராட்ட பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளன.
ஏற்கனவே உள்ளாட்சி தேர்தலுக்கான பணி நடைபெற்று வருகிறது. தற்போது இந்த SIR பணியால் வாக்குசாவடி அளவிலான அதிகாரிகள் மிகுந்த அழுத்தத்திற்கு உள்ளாகி வருவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.