வெள்ளி தட்டில் உணவு, ஒருவேளை விருந்துக்கு ரூ.27 லட்சம் செலவு செய்த மகாராஷ்டிரா அரசு- காங்கிரஸ் கண்டனம்
- 2 நாட்கள் நடந்த விழாவை பாராளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லா தொடங்கி வைத்தார்.
- பட்ஜெட் குழு உறுப்பினர்களுக்கு வெள்ளித்தட்டில் உணவு பரிமாறப்படவில்லை.
மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் உள்ள விதான் பவனில் இந்தியா முழுவதிலிருந்து வந்திருந்த பட்ஜெட் குழு உறுப்பினர்களுக்கு ஆடம்பர விருந்து அளிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாராளுமன்ற மதிப்பீட்டுக்கு குழுவின் பவள விழா மும்பையில் உள்ள விதான் பவன் வளாகத்தில் நடைபெற்றது. 2 நாட்கள் நடந்த இந்த விழாவை பாராளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லா தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் நாடு முழுவதிலும் இருந்து மாநில மற்றும் யூனியன் பிரதேசத்திலிருந்து சுமார் 600 பேர் கலந்து கொண்டனர்.
இதில் பங்கேற்ற விருந்தினர்களுக்கு விருந்து பரிமாறப்பட்டது. ரூ.500 மதிப்பிலான வெள்ளித்தட்டில் பரிமாறப்பட்ட உணவின் விலை ரூ.5 ஆயிரம் எனவும், ஒரு வேளை விருந்துக்கு ரூ.27 லட்சம் செலவானதாகவும் தகவல் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மகாராஷ்டிரா காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் விஜய் வெட்டிவார் கூறியிருப்பதாவது:-
மாநிலம் கிட்டத்தட்ட திவாலாகிவிட்ட நிலையில், மும்பையில் உள்ள மதிப்பீட்டுக் குழுக்களின் உறுப்பினர்களுக்கு வெள்ளித்தட்டுகளில் உணவு பரிமாற வேண்டிய அவசியம் என்ன?
விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யாமல், ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படாமல் பல நலத்திட்டங்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படாமல் காலம் தாழ்த்து அரசு விருந்திற்காக இவ்வளவு பணம் செலவு செய்வது ஏன் என குற்றம் சாட்டியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஹர்ஷவர்தனும் இதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
ரூ.500 வெள்ளித்தட்டில் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட உணவின் விலை ரூ.4,500 என்றால் இந்த விருந்திற்கு மட்டும் ரூ.27 லட்சம் அரசு செலவழித்துள்ளதாக சமூக செயற்பாட்டாளர் கும்பார் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிகழ்விற்கான விளம்பரத்திற்கு 40 அடி நீள பேனர், உறுப்பினர்கள் தங்குவதற்கு தாஜ் ஓட்டல், விருந்து சாப்பிட ஏ.சி. அறை என பொதுமக்களுக்கு சிக்கனத்தை சொல்லித் தர வேண்டிய குழுவே இத்தகைய ஆடம்பரமான செலவில் அரசின் பணத்தை செலவழித்திருப்பது கண்டிக்கத்தக்கது என தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் பட்ஜெட் குழு உறுப்பினர்களுக்கு வெள்ளித்தட்டில் உணவு பரிமாறப்படவில்லை. வெள்ளி முலாம் பூசப்பட்டத்தட்டுதான் எனவும், அதேபோல் உணவிற்கான விலை ரூ.5 ஆயிரம் அல்ல அதற்கும் குறைவுதான் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதுகுறித்து எந்த முறையான தகவல்களும் அரசுத் தரப்பிடமிருந்து தெரிவிக்கப்படவில்லை.