இந்தியா

இந்தியாவில் அதிர்ச்சி தரும் இறப்புப் பதிவு.. மருத்துவ உதவியின்றி உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு

Published On 2025-06-10 05:42 IST   |   Update On 2025-06-10 05:42:00 IST
  • பதிவு செய்யப்பட்ட இறப்புகளில் 50.7% பேர் மரணத்தின்போது மருத்துவ கவனிப்பைப் பெறவில்லை.
  • 2022 இல் பதிவு செய்யப்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை (102.2 லட்சத்தில் இருந்து 86.5 லட்சமாக) 15.4% குறைந்துள்ளது.

இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட இறப்புகளில் ஏறக்குறைய பாதி பேர், மரணிக்கும் சமயத்தில் எந்தவித மருத்துவ உதவியையும் பெறவில்லை என 2022 ஆம் ஆண்டுக்கான சிவில் பதிவு அமைப்பு (CRS) வெளியிட்டுள்ள புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. இது நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பின் பலவீனத்தை வெளிப்படுத்துகிறது.

2022 இல் பதிவு செய்யப்பட்ட இறப்புகளில் 50.7% பேர் மரணத்தின்போது மருத்துவ கவனிப்பைப் பெறவில்லை. 2020 உடன் ஒப்பிடுகையில் இது 5 சதவீத சரிவாகும்.

மொத்த இறப்புகளில் எவ்வளவு சதவீதம் பதிவு செய்யப்படவில்லை என்பதற்கான தரவுகள் இல்லாததால், உண்மையான நிலை இன்னும் மோசமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

2021 உடன் ஒப்பிடுகையில்,2022 இல் பதிவு செய்யப்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை (102.2 லட்சத்தில் இருந்து 86.5 லட்சமாக) 15.4% குறைந்துள்ளது.

இது 2021 இல் கோவிட்-19 டெல்டா அலை காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததை சுட்டிக்காட்டுகிறது.

2022 இல் வெறும் 22.3% இறப்புகளுக்கு மட்டுமே மருத்துவ ரீதியாக காரணம் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, முக்கால்வாசி இறப்புகளுக்கான காரணங்கள் வகைப்படுத்தப்படவில்லை. இது மருத்துவ கவனிப்பு இல்லாததால் ஏற்பட்ட பாதிப்பாகும்.

மருத்துவ ரீதியாக உறுதி செய்யப்பட்ட இறப்பு விகிதம் (MCCD) மாநிலங்களுக்கு இடையே பெரும் வேறுபாடுகளைக் காட்டுகிறது. உதாரணமாக, பீகாரில் 5.4%, தமிழ்நாட்டில் 43%, சிக்கிமில் 48.6% MCCD விகிதம் உள்ளது.

2022 இல் இந்தியாவின் சிசு மரண விகிதம் (stillbirth rate) 1,000 உயிருள்ள பிறப்புகளுக்கு 7.54 ஆக குறைந்துள்ளது. இது இந்தியாவின் 'நியூபார்ன் ஆக்ஷன் பிளான்' இலக்கை எட்டியுள்ளது. இருப்பினும், மேகாலயா (14.46), ராஜஸ்தான் (12.91), குஜராத் (10.47) போன்ற மாநிலங்கள் கவலைக்குரிய நிலையில் உள்ளன.

இந்த தரவுகள் இந்தியாவின் சுகாதார அமைப்பு, இறப்புப் பதிவு மற்றும் சமூக வளர்ச்சியில் உள்ள சவால்களை வெளிப்படுத்துகின்றன. 

Tags:    

Similar News