இந்தியா

மகரவிளக்கு சீசன்... சபரிமலை காணிக்கையை எண்ணும் செலவு மட்டும் ரூ.1 கோடி...

Published On 2024-02-22 05:22 GMT   |   Update On 2024-02-22 05:22 GMT
  • மலேசியா, சிங்கப்பூர், நேபாளம் போன்ற நாடுகளின் நாணயங்களும் சபரிமலையில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையில் இருக்கின்றன.
  • பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் நாணயங்களை எண்ணுவதற்கு 2017-ம் ஆண்டு வரை எந்திரம் பயன்படுத்தப்பட்டது

திருவனந்தபுரம்:

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை சீசன் காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். இந்த ஆண்டும் பல லட்சம் பக்தர்கள் வந்தனர்.

கூட்டத்தை நிர்வகிப்பதில் சரியான நடவடிக்கை எடுக்காததன் காரணமாக, இந்த ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு சீசன் காலத்தில் பல நாட்கள் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிக்குள்ளாகினர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த மாதாந்திர பூஜை காலத்திலும் பக்தர்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.

மண்டல மற்றும் மகரவிளக்கு சீசனின்போது பக்தர்கள் செலுத்திய காணிக்கையில் பண நோட்டுகள் எண்ணும் பணி ஏற்கனவே நடந்து முடிந்துவிட்டது. அதில் ரூ.357.47 கோடி பண நோட்டுகள் கிடைத்தன. இந்தநிலையில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையில் நாணயங்களை எண்ணும் பணி தற்போது நடைபெற்றது.

சபரிமலையில் உள்ள உண்டியல்களில் இருந்த நாணயங்கள் அனைத்தும் மொத்தமாக சேகரிக்கப்பட்டு, மாளிகைபுரம் கோவிலின் பின்புறம் உள்ள அன்னதான மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டன. கடந்த 5-ந்தேதி தொடங்கிய இந்த பணி நேற்று முடிவடைந்தது.

அதில் ரூ.11.65 கோடி நாணயங்கள் இருந்தன. இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், நேபாளம் போன்ற நாடுகளின் நாணயங்களும் சபரிமலையில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையில் இருக்கின்றன. அவற்றை எண்ணும் பணி நடைபெற இருக்கிறது.

பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் நாணயங்களை எண்ணுவதற்கு 2017-ம் ஆண்டு வரை எந்திரம் பயன்படுத்தப்பட்டது. ஆனால் அந்த எந்திரம் பழுதானதால், அதன்பிறகு தேவசம்போர்டு ஊழியர்களால் நேரடியாக எண்ணும் முறை பின்பற்றப்படுகிறது.

நாணயங்கள் எண்ணும் பணி நடைபெற்றபோது எடுத்த படம்.

நாணயங்கள் எண்ணும் பணியில் ஈடுபடுபவர்களுக்கு பயண செலவு உள்ளிட்டவைகள் வழங்கப்படும். நாணயங்கள் எண்ணும் பணியில் தேவசம் போர்டு ஊழியர்கள் 400 பேர் ஈடுபடுத்தப்பட்டனர்.

அவர்களுக்கான உணவு செலவு, போக்குவரத்து செலவு, மின்கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும் சேர்த்து நாணயங்கள் எண்ணுவதற்கான செலவே ரூ.1 கோடிக்கு மேல் வரும் என்று கூறப்படுகிறது. இதனால் நாணயங்கள் எண்ணுவதற்கான எந்திரங்களை பழுது நீக்கி பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News