இந்தியா

பறிமுதல் செய்யப்பட்ட பணத்தையும், பறிமுதல் செய்த அதிகாரிகளையும் படத்தில் காணலாம்.

கர்நாடகத்தில் காரில் எடுத்துச் சென்ற ரூ.1½ கோடி பறிமுதல்

Published On 2023-04-21 07:29 IST   |   Update On 2023-04-21 07:29:00 IST
  • காரில் இருந்த 2 பேரிடம் விசாரித்த போது சரியான தகவல்களை தெரிவிக்கவில்லை.
  • வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெங்களூரு :

கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற 10-ந் தேதி நடைபெற உள்ளதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில், பெலகாவி மாவட்டம் ராமதுர்காவில் பா.ஜனதா வேட்பாளரான சிக்க ரேவண்ணாவின் ஆதரவாளர்கள், ராமதுர்காவில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது.

மேலும் தேர்தல் அதிகாரிகளுக்கும் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, ராமதுர்கா அருகே துரனூரு கிராமத்தில் போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டார்கள். அப்போது அங்கு வந்த ஒரு காரை வழிமறித்து சோதனை நடத்தினார்கள். அந்த காரில் கட்டுக்கட்டாக பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஒட்டு மொத்தமாக ரூ.1 கோடியே 54 லட்சம் இருந்தது.

அதுபற்றி காரில் இருந்த டிரைவர் உள்பட 2 பேரிடம் விசாரித்த போது சரியான தகவல்களை தெரிவிக்கவில்லை. அந்த பணத்திற்கு உரிய ஆவணங்களும் 2 பேரிடமும் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, ரூ.1.54 கோடியையும் தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தார்கள்.

அந்த பணம் பா.ஜனதா வேட்பாளருக்கு சொந்தமானதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக ராமதுர்கா போலீஸ் நிலையத்தில் கார் டிரைவர் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1.54 கோடியையும், வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக வருமானவரித் துறையினரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News