இந்தியா

ஊழல் செய்து ரூ.1,000 கோடி சம்பாதித்ததை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலக தயார் - ரோஜா அதிரடி

Published On 2025-07-22 09:42 IST   |   Update On 2025-07-22 09:42:00 IST
  • தமிழிலும், தெலுங்கிலும் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்தேன்.
  • நகரியில் மட்டும்தான் நான் வெற்றி பெற்ற பிறகு சொந்த வீடு கட்டிக்கொண்டேன்.

நகரி:

பிரபல நடிகையும், ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் மந்திரியாக இருந்தவருமான ரோஜா, அரசியலில் ஊழல் செய்து ரூ.1,000 கோடி சம்பாதித்ததாக நகரி தொகுதி தெலுங்குதேசம் கட்சி எம்.எல்.ஏ. பானு பிரகாஷ் குற்றம்சாட்டி இருந்தார்.

அவருக்கு பதில் அளிக்கும் வகையில் ரோஜா அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

எனக்கு பல ஊர்களில் வீடுகள் இருப்பதாக பானு பிரகாஷ் கூறுகிறார். ஐதராபாத், சென்னையில் உள்ள வீடுகள் நான் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெறுவதற்கு முன் சம்பாதித்த சொத்துகள். 1991-ம் ஆண்டு முதல் சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கிறேன்.

தமிழிலும், தெலுங்கிலும் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்தேன். இதுதவிர விளம்பரங்கள், டி.வி. நிகழ்ச்சிகள், கடை திறப்பு விழாக்கள் என்று ஓய்வில்லாமல் உழைத்து சம்பாதித்தேன். ஒரு படத்தில் நடித்தால் ஒரு கோடி ரூபாய் சம்பளம் கொடுப்பார்கள். நகரியில் மட்டும்தான் நான் வெற்றி பெற்ற பிறகு சொந்த வீடு கட்டிக்கொண்டேன். எனது சொத்துகளுக்கும், சம்பளத்துக்கும் கணக்கு இருக்கிறது.

அப்படியிருக்கும்போது அரசியலுக்கு வந்து ஊழல் செய்து 1,000 கோடி ரூபாய் சம்பாதித்தேன் என்று சொல்வது தவறு. உண்மையாக இருந்தால் பானுபிரகாஷ் அதை நிரூபிக்க வேண்டும். நிரூபித்தால் அரசியலில் இருந்து நான் விலகத் தயார். அதேசமயம் நிரூபிக்க தவறினால் பானு பிரகாஷ் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலை விட்டு விலக தயாரா?.

இவ்வாறு ரோஜா தெரிவித்தார்.

Tags:    

Similar News