இந்தியா

டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் தமிழக அரசின் அலங்கார ஊர்தி.

தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி- டெல்லி குடியரசு தின விழா ஒத்திகையில் பங்கேற்பு

Published On 2023-01-24 08:37 IST   |   Update On 2023-01-24 08:37:00 IST
  • தமிழக அரசின் அலங்கார ஊர்தி, பெண்களை மையப்படுத்தியதாக இருந்தது.
  • வாழும் இயற்கை விவசாயி பாப்பம்மாள் கையில் மண்வெட்டியுடன் நிற்கும் சிலை ஊர்தியில் இடம்பெற்றுள்ளது.

புதுடெல்லி:

டெல்லியில் கடந்த ஆண்டு நடைபெற்ற மத்திய அரசின் குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்களை மையப்படுத்தி அலங்கார ஊர்தியாக அது வடிவமைக்கப்பட்டு இருந்தது. இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த அலங்கார ஊர்தியை தமிழகம் முழுவதும் வலம் வரச்செய்தார்.

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான குடியரசு தின விழா அணிவகுப்புக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஊர்தி வடிவமைப்பின் மாதிரிகள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. இதற்கு அனுமதி கிடைத்ததை தொடர்ந்து டெல்லியில் உள்ள கண்டோன்மெண்ட் பகுதியில் ஊர்தி கட்டமைக்கப்பட்டது. இதைப்போல அணிவகுப்பில் பங்கேற்கும் பிற ஊர்திகளும் அங்கே தயாராகின.

குடியரசு தின கொண்டாட்டம் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடைபெற இருப்பதை முன்னிட்டு டெல்லி கடமையின் பாதையில் நேற்று காலை முழு அணிவகுப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.

இதில் முப்படைகளும் பங்கேற்றன. வீரர்கள் விமான சாகசங்களையும் நிகழ்த்தினார்கள். அதைப்போல பல்வேறு துறைகள் மற்றும் மாநிலங்களின் அலங்கார ஊர்திகளும் அணிவகுத்தன. எல்லை பாதுகாப்புப்படை சார்பிலும் அலங்கார ஊர்தி கலந்து கொண்டது. மேலும் அதன் ஒட்டகப் படையும் அணிவகுத்தது.

இதைப்போல மாநிலங்கள் சார்பிலான அலங்கார ஊர்திகளில் அந்தந்த மாநில கலாசாரம் காண்பிக்கப்பட்டு இருந்தது.

தமிழக அரசின் அலங்கார ஊர்தி, பெண்களை மையப்படுத்தியதாக இருந்தது. ஊர்தியின் முகப்பில் அவ்வையாரின் உருவம் பிரமாண்டமாக காட்சி அளித்தது. அது ஒரு மண்டபத்தின் மேலே இருப்பது போல வடிவமைக்கப்பட்டு இருந்தது. மண்டபத்தின் நாலா புறங்களிலும் சிற்பங்கள் இடம்பெற்று இருந்தன. அதில் வீரமங்கை வேலுநாச்சியாரின் சிற்பமும் இருந்தது.

இந்த கட்டமைப்பின் பின்னால் தமிழகத்தின் புகழ்பெற்ற பெண்கள் சிலைகளாக உருவாக்கப்பட்டு இருந்தனர். தஞ்சை பாலசரஸ்வதி பரதம் ஆடுவது போலவும், எம்.எஸ்.சுப்புலட்சுமி இசைக்கருவியுடனும், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் மருத்துவப்பையுடனும் சிலைகளாகி இருந்தனர். மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் சிலையும் இடம்பெற்று இருந்தன.

வாழும் இயற்கை விவசாயி பாப்பம்மாள் கையில் மண்வெட்டியுடன் நிற்கும் சிலையும் இந்த ஊர்தியில் இடம்பெற்றுள்ளது. இந்த கட்டமைப்புக்கு பின்னால் தஞ்சை கோபுரம் இருந்தது. ஊர்தியின் இருபுறத்திலும் மேளவாத்தியங்களுடன் கலைஞர்கள் நடனமாடி சென்றனர்.

Tags:    

Similar News