இந்தியா

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா தானியங்கி விமானம் வெற்றிகரமாக சோதனை: ராஜ்நாத் சிங் பாராட்டு

Update: 2022-07-02 02:06 GMT
  • தானியங்கி விமான தயாரிப்பில் இது ஒரு பெரிய சாதனை.
  • இதற்கான உதிரி பாகங்கள் அனைத்தும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை.

பெங்களூரு:

இந்திய பாதுகாப்பு படைகளுக்கு ஆயுதங்கள், தளவாடங்கள் மற்றும் போர்க்கருவிகளை இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) தயாரித்து வழங்கி வருகிறது. இதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆய்வுக்கூடங்கள் இயங்கி வருகின்றன. அந்தவகையில் பெங்களூருவில் உள்ள டி.ஆர்.டி.ஓ.வின் முதன்மை ஆய்வுக்கூடமான ஏரோநாட்டிக்கல் மேம்பாட்டு நிறுவனம் ஆளில்லா தானியங்கி விமானத்தை வடிவமைத்து தயாரித்துள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஆளில்லா தானியங்கி விமானம் நேற்று முதல் முறையாக சோதிக்கப்பட்டது.

கர்நாடகாவின் சித்ரதுர்காவில் நடத்தப்பட்ட இந்த சோதனையின்போது, இந்த விமானம் வெற்றிகரமாக மேலெழும்பி பறந்ததுடன், வெற்றிகரமாக தரையிறங்கியும் சாதித்தது. பரிசோதனையின் அனைத்து இலக்குகளையும் விமானம் எட்டியதால், டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகள் மிகுந்த மகிழ்ச்சியை வெளியிட்டனர்.

முற்றிலும் தானியங்கி முறையில் செயல்பட்ட இந்த விமானம், ஒரு சிறிய டர்போபேன் என்ஜின் மூலம் இயங்குகிறது. இதற்கான உதிரி பாகங்கள் அனைத்தும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை என டி.ஆர்.டி.ஓ. வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.

இந்த பரிசோதனை வெற்றி பெற்றிருப்பதன் மூலம், எதிர்காலத்தில் ஆளில்லா விமானங்களை உருவாக்குவதற்கான முக்கியமான தொழில்நுட்பங்களை வடிவமைப்பதில் இந்த விமானம் ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும் எனவும், அத்தகைய பாதுகாப்பு தொழில்நுட்பங்களில் தன்னிறைவுக்கான ஒரு குறிப்பிடத்தக்க படி இது எனவும் டி.ஆர்.டி.ஓ. கூறியுள்ளது.

இந்த ஆளில்லா தானியங்கி விமானம் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டிருப்பது தொடர்பாக டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகளுக்கு ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்து உள்ளார். தானியங்கி விமான தயாரிப்பில் இது ஒரு பெரிய சாதனை என கூறியுள்ள ராஜ்நாத் சிங், முக்கியமான ராணுவ தளவாடங்களின் தயாரிப்பில் தற்சார்பு இந்தியாவுக்கு இது வழிவகுக்கும் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

Tags:    

Similar News