பிரதமர் மோடியும் டிரம்பும் போனில் பேசவே இல்லை - கச்சா எண்ணெய் Promise குறித்து மத்திய அரசு
- ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதில் நான் மகிழ்ச்சியடையவில்லை.
- நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பது எங்கள் நிலையான முன்னுரிமையாக இருந்து வருகிறது.
நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேட்டியளித்தார்.
அப்போது நிருபர் ஒருவர், இந்தியா ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துமா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த டிரம்ப், ஆமாம், நிச்சயமாக. அவர் (பிரதமர் மோடி) என்னுடைய நண்பர். எங்களுக்குள் ஒரு சிறந்த உறவு இருக்கிறது. இந்தியா ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதில் நான் மகிழ்ச்சியடையவில்லை.
ரஷியாவிலிருந்து எண்ணெய் வாங்க மாட்டோம் என்று இன்று அவர் எனக்கு உறுதியளித்தார். அது ஒரு பெரிய நிறுத்தம். இப்போது நாம் சீனாவையும் அதே காரியத்தைச் செய்ய வைக்க வேண்டும்..." என்று தெரிவித்தார்.
இதற்கிடையே மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இன்று செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, இரு தலைவர்களுக்கும் இடையில் நேற்று எந்த தொலைபேசி உரையாடலும் நடைபெறவில்லை" என்று டிரம்ப் கூற்றை மறுத்துள்ளார்.
முன்னதாக வெளியுறவு அமைச்சகம் வெளிட்ட அறிக்கையில், "இந்தியா எண்ணெய் மற்றும் எரிவாயுவை கணிசமாக இறக்குமதி செய்யும் நாடு. நிலையற்ற எரிசக்தி சூழ்நிலையில் இந்திய நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பது எங்கள் நிலையான முன்னுரிமையாக இருந்து வருகிறது.
நிலையான எரிபொருள் விலை மற்றும் எரிபொருள் விநியோகத்தில் பாதுகாப்புத் தன்மை ஆகிய இரண்டும் தான் இந்தியாவின் எரிசக்தி கொள்கை. எங்கள் இறக்குமதி கொள்கைகள் இந்த நோக்கத்தால் முழுமையாக வழிநடத்தப்படுகின்றன" என்று பொத்தாம்பொதுவாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.