இந்தியா

உலக வங்கி வழங்கிய ரூ.14,000 கோடி நிதியை மோசடியாக செலவு செய்து வென்ற NDA - பிரசாந்த் கிஷோர் கட்சி குற்றச்சாட்டு

Published On 2025-11-16 18:46 IST   |   Update On 2025-11-16 18:46:00 IST
  • புதிதாக களம் கண்ட அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் எந்த இடத்திலும் வெற்றி பெறாமல் டெபாசிட் இழக்கும் நிலைக்கு ஆளானது.
  • பீகாரின் பொதுக் கடன் தற்போது ரூ.4.06 லட்சம் கோடியாக உள்ளது. தினசரி வட்டி சுமை ரூ.63 கோடியாக உள்ளது.

நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் 243 இல் 202 தொகுதிகளை கைப்பற்றி பாஜகவின் -ஜேடியுவின் என்டிஏ கூட்டணி பெரு வெற்றி பெற்றுள்ளது. எதிர்த்து போட்டியிட்ட இந்தியா கூட்டணி 35 இடங்கள் மட்டுமே பெற்று படுதோல்வியை சந்தித்தது.

இதற்கிடையே புதிதாக களம் கண்ட அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் எந்த இடத்திலும் வெற்றி பெறாமல் டெபாசிட் இழக்கும் நிலைக்கு ஆளானது.

இதற்கிடையே தேர்தலுக்கு முன் என்டிஏ அரசு சுமார் ஒன்றரை கோடி பீகார் பெண்களின் வங்கிக்கணக்கில் தொழில் தொடங்கும் நிதிக்கான முன்பணம் என்ற பெயரில் ரூ.10,000 டெபாசிட் செய்ததே அக்கூட்டணியில் வெற்றிக்கு காரணம் என ஜன் சுராஜ் குற்றம்சாட்டியது.

இந்நிலையில் இன்று, ஜன் சுராஜ் கட்சியின் தேசியத் செய்தி தொடர்பாளர் உதய் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

பீகாரின் பொதுக் கடன் தற்போது ரூ.4.06 லட்சம் கோடியாக உள்ளது. தினசரி வட்டி சுமை ரூ.63 கோடியாக உள்ளது. அரசு கஜானா காலியாக இருக்கிறது. பொதுப் பணத்தைப் பயன்படுத்தி, அவர்கள் மக்களின் ஓட்டுக்களை வாங்கினார்கள்.

ஜூன் மாதம் முதல் தேர்தல் அறிவிப்பு வரையில் மக்களின் வாக்குகளை வாங்குவதற்காக நிதிஷ் குமார் அரசால் ரூ.40 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது. 

மாநிலத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்ட ரூ.10 ஆயிரம் பணம், உலக வங்கியிலிருந்து வேறு சில திட்டங்களுக்காக வந்த ரூ.21,000 கோடியிலிருந்து வழங்கப்பட்டது.

தேர்தல் ஒழுக்க நெறிகள் அமலுக்கு வருவதற்கு ஒரு மணிநேரத்துக்கு முன்பாகத்தான் ரூ. 21,000 கோடியில் ரூ.14,000 கோடி எடுக்கப்பட்டு, 1.25 கோடி பெண்களுக்கு ரூ. 10,000 தொகை விநியோகிக்கப்பட்டது. அரசு ஆட்சிக்கு வந்த பிறகு பொது நலனுக்காக செலவிட இப்போது பணம் இல்லை" என்று கூறினார்.  

Tags:    

Similar News