இந்தியா

மோடி அரசின் 9-வது ஆண்டு விழாவை ஒரு மாதம் கொண்டாட திட்டம்

Published On 2023-05-17 08:16 IST   |   Update On 2023-05-17 08:16:00 IST
  • மோடியை 3-வது முறையாக பிரதமர் பதவியில் அமர்த்த பா.ஜனதா விரும்புகிறது.
  • ஒரு மாத காலத்தில் நாடு முழுவதும் 51 பொதுக்கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி :

பிரதமர் மோடி, 2014-ம் ஆண்டு முதல்முறையாக பிரதமராக பதவி ஏற்றார். 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று அந்த ஆண்டில் மே 30-ந்தேதி, தொடர்ந்து 2-வது தடவையாக பிரதமராக பதவி ஏற்றார். வருகிற 30-ந்தேதியுடன் அவர் ஆட்சி பொறுப்பேற்று 9 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதை ஒருமாத காலம் பிரமாண்டமாக கொண்டாட பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. அதாவது, மே 30-ந்தேதி தொடங்கி, ஜூன் 30-ந்தேதிவரை இந்த கொண்டாட்டம் நடைபெறும். பிரதமர் மோடி, இம்மாதம் 30 அல்லது 31-ந்தேதி, ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அத்துடன், ஒரு மாத கொண்டாட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

முன்னதாக, மே 29-ந்தேதி, பா.ஜனதா ஆளும் மாநிலங்களின் முதல்-மந்திரிகளும், துணை முதல்-மந்திரிகளும் பத்திரிகையாளர் சந்திப்புகளில் பங்கேற்பார்கள். 9 ஆண்டுகால மோடி அரசின் சாதனைகளை எடுத்துக்கூறுவார்கள். பா.ஜனதா ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், மத்திய மந்திரிகள் பேட்டி அளிப்பார்கள்.

ஒரு மாத காலத்தில் நாடு முழுவதும் 51 பொதுக்கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவற்றில், பா.ஜனதா மூத்த தலைவர்கள் பங்கேற்று பேசுவார்கள். இதுதவிர, ஒவ்வொரு மக்களவை தொகுதியிலும் 250 பிரபலமான குடும்பங்களை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம், நாடு முழுவதும் 1 லட்சம் குடும்பங்களை சந்திப்பார்கள். அடுத்த ஆண்டு நடக்கும் பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடித்து மோடியை 3-வது முறையாக பிரதமர் பதவியில் அமர்த்த பா.ஜனதா விரும்புகிறது.

Tags:    

Similar News