இந்தியா

பாராளுமன்ற தேர்தல்: தனக்கென சொந்த தேர்தல் அறிக்கை வெளியிட்ட நிதின் கட்கரி - ஏன் தெரியுமா?

Published On 2024-04-16 17:23 GMT   |   Update On 2024-04-16 17:23 GMT
  • நாக்பூர் தொகுதிக்காக தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட்டு இருக்கிறது.
  • நிதின் கட்கரி தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அமைச்சரும், நாக்பூர் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளருமான நிதின் கட்கரி நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்காக தனது சொந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். நாக்பூர் தொகுதிக்காக மட்டுமே இந்த தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட்டு இருக்கிறது.

வரவிருக்கும் தேர்தலில் வெற்றி பெற்றால், தனது தொகுதி மக்களுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்பதை நிதின் கட்கரி தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதுதவிர கடந்த பத்து ஆண்டுகளில் அவர் செய்த பணி குறித்த தகவல்களையும் அதில் சேர்த்துள்ளார்.

அந்த வகையில், மூன்றாவது முறை வெற்றி பெறும் பட்சத்தில் நாக்பூரை சுத்தமாகவும், அழகாகவும் மாற்றுவது தொடர்பான பணிகளில் ஈடுபடுவதாக அவர் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் நாட்டில் சுகாதாரம், வளர்ச்சி உள்ளிட்ட பிரிவுகளில் நாக்பூரை முதல் ஐந்து நகரங்களில் ஒன்றாக மாற்றுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், மத்திய மற்றும் மாநில அரசுகளின் உதவியோடு சேரிகளை ஒழுங்குப்படுத்தி, புதிய வீடுகளை கட்டித் தருவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். இது தொடர்பான பணிகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. நகரின் பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கும் அதிக பூங்காக்கள் அமைக்கப்படும், ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள பூங்காக்கள் புதுப்பிக்கப்படும்.

நாக்பூரில் மட்டும் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும். 2029 ஆம் ஆண்டிற்குள் விதர்பா பகுதியில் ஐந்து லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும். 2070 ஆம் ஆண்டு வரை தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது என நிதின் கட்கரி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளாக குறிப்பிட்டுள்ளார். 

Tags:    

Similar News