இந்தியா

'ஆபரேஷன் சிந்தூரில்' 24 மணி நேரமும் உழைத்த 400 விஞ்ஞானிகள்- இஸ்ரோ தலைவர் தகவல்

Published On 2025-09-10 06:43 IST   |   Update On 2025-09-10 06:44:00 IST
  • இஸ்ரோ அடுத்த 3 ஆண்டுகளுக்குள் செயற்கைக்கோள் ஏவுதல்களை 3 மடங்காக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
  • ஆயுத மோதல்களில் விண்வெளித் துறையின் பங்கு, ஆபரேஷன் சிந்தூரின்போது கூர்மையாக கவனிக்கப்பட்டது.

புதுடெல்லி:

டெல்லியில் அகில இந்திய மேலாண்மை சங்கத்தின் 52-வது தேசிய மேலாண்மை மாநாடு நடந்தது. அதில் கலந்து கொண்ட இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறியதாவது:-

காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் 26 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் பாகிஸ்தானுக்குள் துல்லியமாக முப்படைகளின் மூலம் பதிலடி கொடுக்கப்பட்டது.

அப்போது, தேசிய பாதுகாப்பு தேவைகளுக்காக பூமி கண்காணிப்பு மற்றும் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை பயன்படுத்தி, 400-க்கும் மேற்பட்ட இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைத்து செயற்கைக்கோள்களின் செயல்பாடுகள் மூலம் 24 மணி நேரமும் தரவுகளை வழங்கினர்.

ஆயுத மோதல்களில் விண்வெளித் துறையின் பங்கு, ஆபரேஷன் சிந்தூரின்போது கூர்மையாக கவனிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையில் டிரோன்கள் மற்றும் சுற்றித்திரியும் வெடிமருந்துகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டன. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 'ஆகாஷ் தீர்' போன்ற வான் பாதுகாப்பு அமைப்புகளின் திறன்களையும் சோதிக்கப்பட்டன.

இஸ்ரோ அடுத்த 3 ஆண்டுகளுக்குள் செயற்கைக்கோள் ஏவுதல்களை 3 மடங்காக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. கூடுதல் செலவுகள் இல்லாமல் மார்க்-3 ராக்கெட் சுமந்து செல்லும் திறன் 4 ஆயிரம் கிலோவில் இருந்து 5 ஆயிரத்து 100 கிலோவாக மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். அதேபோல், அடுத்த தலைமுறை ஏவுதளம், பிரதமரால் அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய ஏவுதளம் இந்தியாவின் விரிவடைந்து வரும் விண்வெளி லட்சியங்களை நிறைவேற்ற உதவிகரமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News