இந்தியா

அசாமில் அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள்.. 2 நாளில் மட்டும் 2257 பேர் கைது

Published On 2023-02-04 13:51 GMT   |   Update On 2023-02-04 13:51 GMT
  • போலீசாரின் கைது நடவடிக்கையால் ஆத்திரமடைந்த பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • துப்ரி மாவட்டத்தில் காவல் நிலையம் முன்பு நடந்த போராட்டத்தின்போது போலீசார் தடியடி நடத்தினர்.

கவுகாத்தி:

அசாமில் குழந்தை திருமணம் அதிகரித்து வருவதை தடுக்க, மாநில அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. குழந்தை திருமணத்தில் ஈடுபடுவோர், திருமணத்தை நடத்தி வைப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா அறிவித்தார். அதன்படி போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த 2 நாட்களில் மட்டும் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையில் 4004 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, 2,257 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 51 நபர்கள் மத குருக்கள் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீசாரின் கைது நடவடிக்கையால் ஆத்திரமடைந்த பெண்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்ட கணவன் மற்றும் மகன்களை விடுவிக்க வலியுறுத்தி முழக்கமிட்டனர். துப்ரி மாவட்டத்தில் காவல் நிலையம் முன்பு நடந்த போராட்டத்தின்போது, பெண்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால் அங்கு பதற்றம் உருவானது.

அடுத்த 6 நாட்களுக்கு இந்த அதிரடி நடவடிக்கை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 8000 பேர் குழந்தை திருமணம் தொடர்பாக குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News