இந்தியா

பீகாரில் 10-வது தடவையாக நிதிஷ்குமார் 19-ந்தேதி முதல்-மந்திரியாக பதவி ஏற்பு

Published On 2025-11-16 14:39 IST   |   Update On 2025-11-16 14:39:00 IST
  • பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் பதவி ஏற்பு விழா நடைபெறும்.
  • பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

பாட்னா:

243 உறுப்பினா்களை கொண்ட பீகாா் சட்டசபைக்கு நடைபெற்ற தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளை கைப்பற்றி இமாலய வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது.

இந்த கூட்டணியில் 89 இடங்களுடன் பா.ஜ.க தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஐக்கிய ஜனதா தளத்துக்கு 85 தொகுதிகளும், லோக் ஜனசக்திக்கு (ராம் விலாஸ் பஸ்வான்) 19 இடங்களும், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சிக்கு 5 தொகுதிகளும், ராஷ்டிரிய லோக் மோர்ச்சாவுக்கு 4 இடங்களும் கிடைத்தன.

ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகளின் 'இந்தியா' கூட்ட ணிக்கு பலத்த அடி விழுந்தது. இந்த கூட்டணியால் 34 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. ராஷ்டிரிய ஜனதாதளம் 25, காங்கிரஸ்-6, மார்க்சிஸ்டு லெனினிஸ்டு-2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு-1 இடங்களை கைப்பற்றின.

தனித்து போட்டியிட்ட ஒவைசி கட்சி 5 இடங்களிலும் பகுஜன் சமாஜ் ஒரு தொகுதியிலும், ஐ.ஐ.பி. ஒரு இடத்தையும் பிடித்தன.

தேர்தலில் பா.ஜ.க.வைச் சோ்ந்த துணை முதல்-மந்திரிகள் சாம்ராட் சவுத்திரி, விஜய் குமாா் சின்கா உள்பட மாநில மந்திரிகள் 25 போ் (பா.ஜ.க. 15, ஐக்கிய ஜனதா தளம் 10) மீண்டும் போட்டியிட்டனா். இவா்களில், ஐக்கிய ஜனதா தளத்தின் சுமித்குமாா் சிங் தவிர மற்ற அனைவரும் வெற்றி பெற்றனா்.

இதற்கிடையே பீகாரில் புதிய ஆட்சி அமைப்பது தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் டெல்லியிலும், பாட்னாவிலும் பேச்சுவார்த்தையை தொடங்கின. பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமாரை அவரது இல்லத்தில் சிராக் பஸ்வான் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.

ஐக்கிய ஜனதா தள செயல் தலைவர் சஞ்சய் குமார் ஜா டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார்.

நிதிஷ்குமாரை மீண்டும் முதல்-மந்திரியாக்க பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சம்மதித்துள்ளன. இதுகுறித்து அமித்ஷா கூறும்போது, "பீகார் மக்கள் நல்ல ஆட்சி மீது நம்பிக்கை வைத்து வாக்களித்து இருக்கிறார்கள். மாநில மக்கள் நிதிஷ்குமார் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து உள்ளனர்" என்றார்.

புதிய ஆட்சி அமைப்பதற்கு ஏதுவாக நிதிஷ்குமார் நாளை முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன் பிறகு ஐக்கிய ஜனதா தளம் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் நிதிஷ்குமார் முதல்-மந்திரியாக தேர்ந்து எடுக்கப்படுவார். அதை தொடர்ந்து புதிய ஆட்சி அமைக்க அவர் கவர்னரை சந்தித்து உரிமை கோருவார்.

நிதிஷ்குமார் முதல்-மந்திரியாக பதவியேற்கும் விழா புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை நடைபெறும் என்று தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர் ஒருவர் தெரிவித்தார். 19-ந்தேதி சர்வ அமாவாசை (நல்ல நாள்) என்பதால் அன்றே அவர் பதவி ஏற்கலாம் என்று கூறப்படுகிறது. பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் பதவி ஏற்பு விழா நடைபெறும்.

தற்போது அமைய இருக்கும் புதிய ஆட்சியில் கூட்டணியில் உள்ள மற்ற 3 கட்சிகளும் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மந்திரிசபையில் இடம் பெறுவதில் ஆர்வத்துடன் இருப்பதாக லோக் ஜனசக்தி தலைவரும், மத்திய மந்திரியுமான சிராக் பஸ்வான் நிதிஷ்குமாரை சந்தித்த பிறகு தெரிவித்தார். கடந்த அமைச்சரவையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க. மட்டுமே இடம் பெற்றன.

பா.ஜ.க.வில் 15 பேரும், ஐக்கிய ஜனதா தளத்தில் 12 பேரும், லோக் ஜனசக்தி கட்சியில் 6 பேரும், இந்துஸ் தானி அவாம் மோர்ச்சா, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா ஆகிய கட்சிகள் சார்பில் ஒரு வரும் மந்திரிகள் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பீகாரில் 10-வது முறையாக நிதிஷ்குமார் பதவியேற்கிறார்.

முதன்முதலில் அவர் 2000-ம் ஆண்டு மார்ச் 3-ந்தேதி முதல்-மந்திரியாக பதவியேற்றார். இந்த அரசு மெஜாரிட்டி நிரூபிக்க முடியாமல் அடுத்த 7 நாட்களில் கவிழ்ந்தது. ஓராண்டுக்கு பிறகு நடந்த தேர்தலில் ஆர்.ஜே.டி. கட்சி சார்பில் லல்லுவின் மனைவி ராப்ரி தேவி மீண்டும் முதல்-மந்திரி ஆனார். அதன்பிறகு 2005-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மை பெற்று நிதிஷ்குமார் முதல்-மந்திரி ஆனார்.

கடந்த 2010-ம் ஆண்டு நிதிஷ்குமார் 3-வது முறை முதல்-மந்திரி ஆனார். கடைசி 2 ஆட்சியிலும் நிதிஷ்குமாருக்கு பா.ஜ.க. முழு ஆதரவு அளித்தது. பின்னர் 2014-ம் ஆண்டு பா.ஜ.க.வில் இருந்து நிதிஷ்குமார் பிரிந்தார். லல்லுவின் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மெகா கூட்டணியில் இணைந்தவர் 2015-ம் ஆண்டு மகத்தான வெற்றி பெற்றார்.

இதில் முதல்-மந்திரியாக நிதிஷ்குமார் மீண்டும் ஆட்சிக்கு வந்தார். கடந்த 2017-ம் ஆண்டு அவர் மெகா கூட்டணியில் இருந்து பிரிந்து மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு திரும்பினார். 2020-ம் ஆண்டு மறுபடியும் முதல்-மந்திரியாக நிதிஷ்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2022-ல் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறி

ஆர்.ஜே.டி., காங்கிரசின் மெகா கூட்டணி சார்பில் முதல்-மந்திரியானார்.

இதற்கிடையில் 2024-ம் ஆண்டு மே 24-ந்தேதி முதல் 278 நாட்கள் ஜே.டி.யு. ஆட்சியில் ஜிதன்ராம் மாஞ்சி இடைக்கால முதல்-மந்திரியாக இருந்தார்.

ஜனவரி 2024-ம் ஆண்டு நிதிஷ்குமார் மீண்டும் மெகா கூட்டணியை விட்டு வெளியேறி பா.ஜ.க.வுடன் இணைந்து 9-வது முறையாக முதல்-மந்திரி ஆனார். தற்போது 10-வது முறையாக முதல்-மந்திரி பொறுப்பேற்க உள்ளார்.

Tags:    

Similar News