இந்தியா
null

முதல்வர் வேட்பாளர் அவர்தான்.. 160 தொகுதி எங்களுக்குதான் - அமித் ஷா

Published On 2025-11-02 04:51 IST   |   Update On 2025-11-02 04:53:00 IST
  • பீகார் அரசியல் ரீதியாக விழிப்புணர்வு பெற்ற மாநிலங்களில் ஒன்றாகும்.
  • தேஜஸ்வி யாதவ் 2 கோடிக்கும் அதிகமான வேலை தருவதாகக் கூறுகிறார். அது பீகார் பட்ஜெட்டை வைத்துப் பார்த்தால் சாத்தியமில்லாத வாக்குறுதி.

பீகார் சட்டசபைக்கு முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு வருகிற 6-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. 2-வது கட்டமாக எஞ்சிய 122 இடங்களுக்கு 11-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது.

இந்நிலையில் பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும் என்றும் நிதீஷ் குமார்தான் தங்கள் முதலமைச்சர் வேட்பாளர் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் பேசிய அவர், "பீகார் அரசியல் ரீதியாக விழிப்புணர்வு பெற்ற மாநிலங்களில் ஒன்றாகும். கடந்த 20 ஆண்டுகளில் பீகாரின் வளர்ச்சிக்கு நாங்கள் அடித்தளம் அமைத்தோம்.

நிதீஷ் குமார் ஆட்சியின்கீழ் சட்டம் ஒழுங்கு நிலை மேம்பட்டதாக மக்கள் சொல்கிறார்கள். கங்கை நதியின் மீது நான்கு பாலங்களைக் கட்டினோம், இன்னும் பத்து பாலங்கள் கட்டுமானத்தில் இருக்கின்றன. இது சாத்தியமாகும் என்று யாரும் நினைக்கவில்லை.

நாங்கள் பீகாரில் நிதீஷ் குமார் தலைமையில் செல்வதை பலமுறை தெளிவுபடுத்தினோம். என்டிஏ வெற்றி பெறும், அவரே முதலமைச்சர் ஆவார். வெற்றிக்குப் பிறகு அரசியலமைப்புச் சட்டப்படி நாங்கள் செல்வோம்.

பீகார் தேர்தலில் என்டிஏ 160 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

எங்கள் பலத்தைப் பற்றி நினைக்காமல், கூட்டணிப் கட்சிகளுடன் இணைந்து செயல்படுவதே பாஜகவின் கொள்கை.

தேஜஸ்வி யாதவ் 2 கோடிக்கும் அதிகமான வேலை தருவதாகக் கூறுகிறார். அது பீகார் பட்ஜெட்டை வைத்துப் பார்த்தால் சாத்தியமில்லாத வாக்குறுதி. புலம்பெயர்வு குறைய, பீகாரிலேயே சுய வேலைவாய்ப்பு உருவாக்கப்பட வேண்டும்.

மகாகத்பந்தன் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மீண்டும் காட்டு ராஜ்ஜியம் திரும்பும். எனவே, பீகார் மக்கள் வாக்களிக்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்று தெரிவித்தார். 

Tags:    

Similar News