இந்தியா

பெண்களுக்கு Night shift அனுமதி.. அமலுக்கு வந்த புதிய தொழிலாளர் சட்டங்களின் முக்கிய அம்சங்கள் என்னென்ன?

Published On 2025-11-22 11:55 IST   |   Update On 2025-11-22 11:55:00 IST
  • 29 தொழிலாளர் சட்டங்களை 4 சட்டங்களாக ஒருங்கிணைத்து, புதிய விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
  • அனைத்து வகையான வேலைகளிலும் அனைத்துப் பெண்களும் இரவுப் பணிகளில் ஈடுபட அனுமதிக்கப்பட வேண்டும்.

2020ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேறிய 4 தொழிலாளர் சட்டங்கள் நேற்று (நவ.21) முதல் நடைமுறைக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்தது.

அதன்படி, 4 தொழிலாளர் சட்டங்கள் நாடு முழுவதும் இன்று அமலுக்கு வந்தன. இதில், ஏற்கனவே இருந்த 29 தொழிலாளர் சட்டங்களை ஊதியக் குறியீடு, தொழில்துறை குறியீடு, சமூக பாதுகாப்பு குறியீடு, தொழில்துறை பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் பணிச் சூழல் குறியீடு என 4 சட்டங்களாக ஒருங்கிணைத்து, புதிய விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

அமலுக்கு வந்த புதிய சட்டங்களின்படி, "அனைத்து தொழிலாளர்களுக்கும் நியமனக் கடிதம் வழங்குவது கட்டாயமாகும். முதலாளிகள் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்தையும் சரியான நேரத்திலும் செலுத்துவது கட்டாயமாகும்.

40 வயதுக்கு மேற்பட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் முதலாளிகள் இலவச வருடாந்திர சுகாதார பரிசோதனைகளை வழங்க வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் PF, ESIC, காப்பீடு மற்றும் பிற சமூக பாதுகாப்பு சலுகைகள் வழங்கப்பட வேண்டும்.

சுரங்கத் தொழில் உட்பட அனைத்து வகையான வேலைகளிலும் அனைத்துப் பெண்களும் இரவுப் பணிகளில் ஈடுபட அனுமதிக்கப்பட வேண்டும். எலக்ட்ராணிக்,ஆடியோவிஷுவல் மீடியா உள்ளிட்டவற்றில் பணியாற்றுபவர்களுக்கு ஓவர் டைம்க்கான இரட்டை ஊதியம் வழங்க வழிவகை செய்யப்பட வேண்டும். 

பெண் தொழிலாளர்களுக்கு சம வாய்ப்புகள் மற்றும் சம ஊதியம் கிடைக்க வேண்டும். ஆபத்தான வேலைகளில் பணிபுரிபவர்களுக்கு 100% சுகாதாரப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். நாடு முழுவதும் ESIC பாதுகாப்பு மற்றும் சலுகைகள் விரிவுபடுத்தப்படும்.

நிலையான கால அல்லது ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முழு நேர, நிரந்தரத் தொழிலாளர்களைப் போலவே விடுப்பு, மருத்துவம் மற்றும் சமூகப் பாதுகாப்பு மற்றும் பணியில் சேர்ந்து ஒரு ஆண்டுக்கு பிறகு கிராஜ்யுட்டி உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் வழங்கப்பட வேண்டும்.  

துன்புறுத்தல், பாகுபாடு மற்றும் ஊதியம் தொடர்பான தகராறுகளுக்கு சரியான நேரத்தில் தீர்வு காணப்பட வேண்டும்.

ஸ்விக்கி, ரோமாடோ, பிளிங்கிட் போன்ற தளங்களில் பணிபுரியும் தொழிலாளர்களும் முறையான வேலைவாய்ப்புத் துறையின் கீழ் வருகிறார்கள்.

முதலாளிகள் இந்தத் தொழிலாளர்களுக்காக நல நிதிகளை அமைத்து, தங்கள் நிறுவனத்தின் வருவாயில் 1.2% ஐ இந்த நிதிக்கு பங்களிக்க வேண்டும். உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.      

Tags:    

Similar News