கேரளா விரையும் தேசிய பாதுகாப்பு படை- குண்டு வெடிப்பு குறித்து போலீசார் தீவிர விசாரணை
- வெடிகுண்டு வெடிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன், நீல நிற கார் புறப்பட்டு சென்றதை கண்டறிந்துள்ளனர்.
- குண்டுவெடிப்பு தொடர்பாக பிரிவினையை தூண்டும் வகையில் சமூக ஊடகங்களில் கருத்து.
கேரள மாநிலம் எர்ணா குளம் பகுதியில் கிறிஸ்தவ கூட்ட அரங்கில் இன்று காலை நடை பெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த குண்டு வெடிப்பில் பெண் ஒருவர் உடல் சிதறி பலியானார். 25-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரையும் மீட்டு கொச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். காயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக புதிய தகவல் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
போலீசார் நடத்திய விசாரணையில் வெடிகுண்டு வெடிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன், நீல நிற கார் புறப்பட்டு சென்றதை கண்டறிந்துள்ளனர்.
இதுதொடர்பாக சிசிடிவி கேமராவில் பதிவான நீல நிற கார் குறித்தும் அதில் சென்றவர்கள் யார் எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எர்ணாகுளம் மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் தேடுதல் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து 8 பேர் தேசிய பாதுகாப்பு படை கேரளா விரைந்துள்ளது. இன்று மாலை கேரளா சென்றடைந்து விசாஒணை தொடங்குவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், குண்டுவெடிப்பு தொடர்பாக பிரிவினையை தூண்டும் வகையில் சமூக ஊடகங்களில் கருத்து பதிவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேளர டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.