இந்தியா

எனது மூளை ரூ.200 கோடி மதிப்புடையது.. மகன்களின் லாபத்துக்காக Ethanol கொள்கையா?- நிதின் கட்கரி விளக்கம்

Published On 2025-09-14 20:15 IST   |   Update On 2025-09-14 20:16:00 IST
  • எனது மகன்கள் சட்டப்படி தொழில் செய்கின்றனர். நான் அவர்களுக்கு ஆலோசனைகளை மட்டுமே வழங்குகிறேன்.
  • எனது வணிகப் பரிந்துரைகள் லாபத்தால் அல்ல, வளர்ச்சிக்காக.

இந்தியா ஏப்ரல் 2023 இல் நாடு தழுவிய அளவில் 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோலை (E20) அறிமுகப்படுத்தியது. கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கும் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைப்பதற்கும் ஒரு முக்கிய படியாக மத்திய அரசு இந்த கொள்கையை முன்வைத்தது.

இருப்பினும், எதிர்க்கட்சிகள் மற்றும் நிபுணர்கள், இந்தத் திட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுத்து வந்தனர். பெட்ரோலில் எத்தனால் கலப்பதால் மைலேஜ் பாதிக்கிறது என விமர்சனங்கள் எழுந்தன.

குறிப்பாக மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியின் 2 மகன்கள் நாட்டின் 2 முன்னணி எத்தனால் உற்பத்தி ஆலையை நடத்துவதால் அவர்களின் சொந்த ஆதாயத்துக்காக எத்தனால் கலந்த பெட்ரோல் ஊக்குவிக்கப்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் இதுகுறித்து நிதின் கட்கரி விளக்கம் அளித்துள்ளார்.

நாக்பூரில் நடந்த வேளாண் நல சங்க நிகழ்ச்சியில் பேசிய அவர், எனது மூளை மாதம் ரூ. 200 கோடி சம்பாதிக்கும் மதிப்புடையது. எப்படி நியாயமாக சம்பாதிக்க வேண்டும் என எனக்கு தெரியும். எனக்கு எந்த பணப் பிரச்னையும் இல்லை. இதையெல்லாம் என் சொந்த நலனுக்காக செய்யவில்லை.

எனது மகன்கள் சட்டப்படி தொழில் செய்கின்றனர். நான் அவர்களுக்கு ஆலோசனைகளை மட்டுமே வழங்குகிறேன். எனது மகன் ஏற்றுமதி, இறக்குமதியில் ஈடுபடுகிறார். அவர்கள் மோசடியில் ஈடுபடுவது கிடையாது. சமீபத்தில், என் மகன் ஈரானில் இருந்து 800 கண்டெய்னரில் ஆப்பிள்களை இறக்குமதி செய்தார்.

அதோடு இந்தியாவில் இருந்து 1000 கண்டெய்னரில் ஈரானுக்கு வாழைப்பழத்தை ஏற்றுமதி செய்தார். எனக்கும் சொந்தமாக சர்க்கரை ஆலை மற்றும் மின் உற்பத்தி மையமும் இருக்கிறது.

நாக்பூரில் உள்ளூர் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளையும் எடுத்துள்ளேன். எனது வணிகப் பரிந்துரைகள் லாபத்தால் அல்ல, வளர்ச்சிக்காக" என்று தெரிவித்துள்ளார். 

Similar News