இந்தியா

பெண் பக்தரின் செல்போனை பறித்துக்கொண்டு மரத்தில் அமர்ந்த குரங்கு

Published On 2024-05-24 03:25 GMT   |   Update On 2024-05-24 03:25 GMT
  • செல்போனை தின்பண்டம் என நினைத்து அந்த குரங்கு, செல்போனுடன் ஒவ்வொரு கிளை, கிளையாக தாவித்தாவி சென்றது.
  • சுமார் அரைமணி நேரம் செல்போனை கொடுக்காமல் போக்கு காட்டிய குரங்கு, அந்த செல்போனால் தனக்கு எந்த பிரயோஜனமும் இல்லை என்று நினைத்து அதை மரத்தில் இருந்து கீழே வீசிவிட்டு சென்றது.

மைசூரு:

குரங்குகள் செய்யும் சேட்டைகள் நம்மை ரசிக்கவும் வைக்கும், சில நேரத்தில் கோபத்தையும் தூண்டும். அந்த வகையில் மைசூருவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. மைசூருவில் உள்ள சாமுண்டி மலையில் பிரசித்திபெற்ற சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் அமைந்திருக்கிறது. அந்த மலைக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

மலையின் அடிவாரத்தில் இருந்து பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்காக தனிப்பாதையும் அமைக்கப்பட்டு உள்ளது. பெரும்பாலான பக்தர்கள் மலையின் அடிவாரத்தில் இருந்து மலை உச்சியில் இருக்கும் அம்மனை தரிசிக்க பாதயாத்திரையாக செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

அதுபோல் நேற்று காலையில் ஹாசனை சேர்ந்த ஒரு பெண் பக்தர், தனது குடும்பத்தினருடன் சாமுண்டீஸ்வரி அம்மனை தரிசிக்க பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் தனது செல்போனை தன்னுடைய கையில் வைத்திருந்தார். இந்த நிலையில் பக்தர்கள் நடந்து செல்லும் பாதையில் குரங்குகள் நடமாட்டம் அதிகமாக இருந்தது.

வழக்கமாக பக்தர்கள் குரங்குகளுக்கு வாழைப்பழம், தேங்காய் உள்ளிட்ட உணவுப் பொருட்களை கொடுப்பது வழக்கம். சில சமயம் குரங்குகளே பக்தர்களின் கையில் இருந்து பிடுங்கிக் கொண்டு ஓடிவிடும். இந்த நிலையில் நேற்று காலையில் நடந்து சென்று கொண்டிருந்த அந்த பெண் பக்தரின் கையில் இருந்த செல்போனை ஒரு குரங்கு வேகமாக ஓடி வந்து பறித்துக் கொண்டது.


பின்னர் அது துள்ளி குதித்து வேகமாக ஓடி அருகில் இருந்த ஒரு மரத்தில் ஏறிக்கொண்டது. இதை சற்றும் எதிர்பாராத அந்த பெண் பக்தர் திடுக்கிட்டார். பின்னர் அவர் பதற்றத்துடன் தனது செல்போனை குரங்கு பறித்துக் கொண்டு ஓடியதைப் பார்த்து கூச்சலிட்டார். அவரை அவருடைய குடும்பத்தினரும், அவ்வழியாக வந்த பக்தர்களும் தேற்றினர்.

பின்னர் அவர்கள் அந்த குரங்கு நோக்கி சென்றனர். அந்த குரங்கைப் பார்த்து அந்த பெண் பக்தரும், அவருடைய குடும்பத்தினரும் செல்போனை கொடுத்துவிடு, கீழே போட்டுவிடு என்று கூறிக்கொண்டே இருந்தனர்.

ஆனால் செல்போனை தின்பண்டம் என நினைத்து அந்த குரங்கு, செல்போனுடன் ஒவ்வொரு கிளை, கிளையாக தாவித்தாவி சென்றது. மேலும் கடித்துப் பார்த்தது. இரண்டு முன்பக்க கால்களால் பிடித்து செல்போனின் முன்பகுதியில் தனது முகத்தைப் பார்த்தது. பின்னர் செல்போனை ஒரு காலால் பிடித்துக் கொண்டே ஒவ்வொரு கிளையாக சென்றது. மேலும் தனது கூட்டாளியான ஒரு குரங்குடன் சேர்ந்து செல்பி புகைப்படம் எடுப்பதுபோல் செல்போனை வைத்துப் பார்த்தது.

இதற்கிடையே கீழே இருந்த அந்த பெண் பக்தரும், அவரது குடும்பத்தினரும் 'பிளீஸ்...பிளீஸ்..., செல்போனை கொடுத்துவிடப்பா' என்று அனுதாப குரலில் கேட்டனர். சுமார் அரைமணி நேரம் செல்போனை கொடுக்காமல் போக்கு காட்டிய குரங்கு, அந்த செல்போனால் தனக்கு எந்த பிரயோஜனமும் இல்லை என்று நினைத்து அதை மரத்தில் இருந்து கீழே வீசிவிட்டு சென்றது.

இதனால் சுமார் அரை மணி நேரமாக தொடர்ந்த அந்த குரங்கின் சேட்டை முடிவுக்கு வந்தது. தனது செல்போனை குரங்கு வீசியதும் அதை அந்த பெண் பக்தர் ஓடோடி சென்று கையில் எடுத்துக் கொண்டார். பின்னர் அந்த செல்போனை அவர் பரிசோதித்துப் பார்த்தார். குரங்கு சேட்டையினால் அந்த செல்போன் சிறிது சேதம் அடைந்திருந்தது. இருப்பினும் செல்போன் பயன்படுத்தக்கூடிய அளவிலேயே இருந்தது.

அதையடுத்து அந்த பெண் பக்தரும், அவரது குடும்பத்தினரும் கைகூப்பி குரங்கை நோக்கி கும்பிட்டுவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சாமுண்டீஸ்வரி அம்மனை தரிசிக்க சென்றனர். தற்போது இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி பலரையும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்து வருகிறது.

Tags:    

Similar News