இந்தியா

அடுத்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் முற்றிலும் பெண்களே பங்கேற்கிறார்கள்

Published On 2023-05-08 07:52 IST   |   Update On 2023-05-08 07:52:00 IST
  • மத்திய அரசு, ஆயுதப்படைகளில் பெண்களுக்கு முக்கிய பங்கு அளித்து வருகிறது.
  • பீரங்கி படையில் 5 பெண் அதிகாரிகள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

புதுடெல்லி :

ஆண்டுதோறும் ஜனவரி 26-ந் தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் பிரமாண்ட அணிவகுப்பு நடப்பது வழக்கம். இந்தியாவின் ராணுவ வலிமையையும், கலாசார பெருமையையும் பறைசாற்றும் வகையில் இந்த அணிவகுப்பு நடத்தப்படுகிறது.

மாநிலங்களின் கலாசார பாரம்பரியத்தை விளக்க மாநிலங்களின் அலங்கார ஊர்திகளும் இடம் பெறுகின்றன. அணிவகுப்பு நடக்கும் ராஜபாதையின் பெயர், 'கடமைப்பாதை' என்று மாற்றப்பட்டுள்ளது.

மத்திய அரசு, ஆயுதப்படைகளில் பெண்களுக்கு முக்கிய பங்கு அளித்து வருகிறது. சமீபத்தில், பீரங்கி படையில் 5 பெண் அதிகாரிகள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

கடந்த சில ஆண்டுகளில், குடியரசு தின அணிவகுப்பில் பெண்கள் மட்டுமே இடம் பெற்ற சில குழுக்கள் பங்கேற்றுள்ளன. ஆண்கள் இடம்பெற்ற குழுவுக்கு பெண் அதிகாரிகள் தலைமை தாங்கி உள்ளனர்.

இந்நிலையில், அடுத்த ஆண்டு கடமைப்பாதையில் நடக்கும் குடியரசு தின அணிவகுப்பில், முற்றிலும் பெண் குழுக்களை பங்கேற்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு செயலாளர் தலைமையில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இதுகுறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. பெண் குழுக்களை மட்டும் பங்கேற்க வைக்க முடிவு செய்யப்பட்டது.

அணிவகுத்து செல்லும் குழுக்களிலும், பாண்டு வாத்திய குழுக்களிலும், அலங்கார ஊர்திகளிலும் முற்றிலும் பெண்கள் மட்டுமே பங்கேற்பார்கள். இதர கலாசார நிகழ்ச்சிகளிலும் பெண்களே இடம் பெறுவார்கள் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுதொடர்பாக முப்படைகள், பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு ராணுவ அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

Tags:    

Similar News