இந்தியா

டெல்லியில் இஸ்லாமிய மாற்றுத்திறனாளி படுகொலை: மனிதநேய ஜனநாயக கட்சி கண்டனம்

Published On 2023-09-29 09:10 GMT   |   Update On 2023-09-29 09:10 GMT
  • எல்லா இடங்களிலும் தொடர்ந்து பரவிவருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
  • மத்திய அரசு பெரிதாக எந்தக் கண்டனமும் தெரிவிப்பதில்லை.

மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் ஹாரூன் ரசீது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

டெல்லியில் சுந்தர் நகரி பகுதியில் இருக்கும் கோயில் ஒன்றில் பிரசாதம் சாப்பிட்டதற்காக மனநலம் பாதிக்கப்பட்ட அப்பாவி இஸ்லாமிய இளைஞர் முகமது இஸ்ரார் என்பவரை மரத்தில் கட்டி வைத்து கடுமையாக தாக்கி படுகொலை செய்துள்ளது ஒரு மதவெறி வன்முறை கும்பல்.

இந்த வன்முறை செயல்கள் கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருக்கிறது. இது எல்லா இடங்களிலும் தொடர்ந்து பரவிவருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தவறு செய்ததற்கான முகாந்திரங்கள் ஏதுமின்றி இஸ்லாமியர்கள் என்பதால் மட்டும் தாக்கப்படுவது இந்தியாவில் அன்றாட வழக்கமாகிவிட்டது, ஆனால் இதற்கு மத்திய அரசு பெரிதாக எந்தக் கண்டனமும் தெரிவிப்பதில்லை. சமீபகாலமாக மத வெறுப்பு பேச்சு, கும்பல் படுகொலைகள் அரங்கேறி வருவது அன்றாடமாகிவிட்டது .

இந்த அசாதாரண சூழல் இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை உணர்ந்து ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து இதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். அப்பாவி இஸ்லாமிய இளைஞர் முகமது இஸ்ராரை படுகொலை செய்த கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், இதுபோன்ற மதவெறி வன்முறை கும்பலை அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News