இந்தியா

அரசியல் பிரச்சனையை எழுப்புவதற்காக செல்லவில்லை: காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சொல்கிறார்

Published On 2023-07-29 06:33 GMT   |   Update On 2023-07-29 06:33 GMT
  • I.N.D.I.A. கூட்டணி எம்.பி.க்கள் 21 பேர் மணிப்பூர் சென்றுள்ளனர்
  • இரண்டு நாட்கள் மணிப்பூரில் நடப்பது என்ன? என்பதை ஆராய உள்ளனர்

மணிப்பூரில் கடந்த மே மாதம் 3-ந்தேதி தொடங்கிய வன்முறைக்குப் பிறகு இன்னும் அமைதி திரும்பவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக மக்களவையில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. சபாநாயகர் இன்னும் விவாதத்திற்கான தேதி அறிவிக்கப்படவில்லை.

இதற்கிடையே கள நிலவரம் குறித்து ஆராய இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் மணிப்பூரில் இரண்டு நாட்கள் பயணம் செய்ய முடிவு செய்தனர். இந்த குழுவில் 21 எம்.பி.க்கள் இடம் பிடித்துள்ளனர். அதில் ஒருவர் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. அதிர் ரஞ்சன் சவுத்ரி.

இவர் மணிப்பூர் செல்வது குறித்து கூறியதாவது:-

இதுவரை பிரதமர் மோடி மணிப்பூர் செல்லும் முயற்சியை மேற்கொள்ளவில்லை. எதிர்க்கட்சிகள் இந்த விவகாரம் குறித்து குரல் கொடுத்த பின்னர்தான், மத்திய அரசு தூக்கத்தில் இருந்து எழுந்துள்ளது.

நாங்கள் அரசியல் பிரச்சனையை எழுப்புவதற்காக மணிப்பூர் செல்லவில்லை. மணிப்பூர் மக்களின் அவலநிலை, அவர்களின் வலியை புரிந்து கொள்வதற்கான செல்கிறோம். அவர்களின் வலிக்கு தீர்வு காணவேண்டும் என்று அரசை வலியுறுத்துகிறோம்.

இது சட்டம்- ஒழுங்கு பிரச்சனையை குறித்தது அல்ல. வகுப்புவாத வன்முறை அங்கு நடக்கிறது. இதுகுறித்து நாங்கள் கவலையடைகிறோம். மணிப்பூரில் நடக்கும் விசயம், அருகில் உள்ள மாநிலங்களையும் பாதித்துள்ளது. அரசு அமைதி மற்றும் சட்டம்- ஒழுங்கை நிலைநாட்டவில்லை. மணிப்பூரில் உண்மையிலான நிலை குறித்து ஆராய்வதற்காக செல்கிறோம்.

இவ்வாறு கூறினார்.

Tags:    

Similar News