இந்தியா

பெங்களூரு ஆஸ்பத்திரியில் முகமது ஷாரிக்கிற்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை

Published On 2022-12-20 04:37 GMT   |   Update On 2022-12-20 04:37 GMT
  • ஷாரிக்கின் 2 கைகள், நெஞ்சு பகுதியில் பலத்த தீக்காயம் ஏற்பட்டு உள்ளது. அந்த தீக்காயம் இன்னும் ஆறவில்லை.
  • ஷாரிக்கை காவலில் எடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.

பெங்களூரு:

கர்நாடக மாநிலம் மங்களூரு நாகுரி பகுதியில் கடந்த மாதம் (நவம்பர்) 19-ந் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் ஆட்டோவில் சென்ற முகமது ஷாரிக், ஆட்டோ டிரைவர் புருஷோத்தம் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். விசாரணையில் குண்டு வெடிப்பு சதி திட்டத்துடன் அதை ஆட்டோவில் முகமது ஷாரிக் எடுத்து சென்றதும், அவருக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருந்ததும் தெரியவந்தது.

இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஷாரிக்கிற்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டு இருந்தது. இதனால் அவருக்கு மங்களூருவில் உள்ள பாதர் முல்லர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஷாரிக்கின் தீக்காயம் 80 சதவீதம் குணமானது.

இதை தொடர்ந்து மங்களூருவில் இருந்து பெங்களூருவுக்கு அழைத்து வந்து ஷாரிக்கிடம் விசாரணை நடத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்தனர். இதையடுத்து டாக்டர்கள் அனுமதியின்பேரில் மங்களூருவில் இருந்து அழைத்து வரப்பட்ட ஷாரிக்கிற்கு பெங்களூரு விக்டோரியா ஆஸ்பத்திரியில் வைத்து தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் சிகிச்சை பெற்று வரும் வார்டை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் ஷாரிக்கின் 2 கைகள், நெஞ்சு பகுதியில் பலத்த தீக்காயம் ஏற்பட்டு உள்ளது. அந்த தீக்காயம் இன்னும் ஆறவில்லை. இதனை சரிசெய்ய டாக்டர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதையடுத்து கைகள், மார்பு பகுதியில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர். அதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) ஷாரிக்கிற்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

ஓரிரு நாட்களில் ஷாரிக் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார். அதன்பிறகு அவரை காவலில் எடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.

Tags:    

Similar News