இந்தியா

தெலுங்கானாவில் ரூ.4 கோடி காப்பீடு பணத்துக்காக சகோதரரை லாரி ஏற்றி கொன்ற வாலிபர்

Published On 2025-12-03 13:09 IST   |   Update On 2025-12-03 13:09:00 IST
  • கடனை அடைக்க சகோதரரை கொலை செய்ய முடிவு செய்தார்.
  • மறுநாள் காலை சகோதரர் லாரி மோதி இறந்து விட்டதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

தெலுங்கானா மாநிலம் கரீம் நகர், ராமதுருவை சேர்ந்தவர் நரேஷ் (வயது30). இவரது சகோதரர் வெங்கடேஷ் ( 37). மனநலம் பாதிக்கப்பட்ட இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இந்த நிலையில் நரேஷ் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மாத தவணையில் 2 லாரிகளை வாங்கி வாடகைக்கு விட்டார். தொழில் சரியாக நடக்காததால் நஷ்டம் ஏற்பட்டது. மேலும் பங்கு சந்தையில் அதிக அளவு பணத்தை முதலீடு செய்தார். பங்கு சந்தையிலும் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது.

இதனால் மாதாந்திர தவணை கட்ட முடியாமல் தவித்து வந்தார். தனக்குத் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி மாதத் தவணை செலுத்தி வந்தார்.

இதன் மூலம் நரேஷுக்கு ரூ.1.50 கோடி கடன் ஏற்பட்டது. கடன் கொடுத்தவர்கள் திருப்பிக் கொடுக்குமாறு நரேஷுக்கு அழுத்தம் கொடுத்தனர்.

கடனை அடைக்க சகோதரரை கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 4 தனியார் காப்பீட்டு நிறுவனம் மற்றும் ஒரு அரசு காப்பீட்டு நிறுவனத்தில் சகோதரர் வெங்கடேஷ் பெயரில் தனித்தனியாக ரூ. 4.14 கோடிக்கு காப்பீடு செய்தார்.

ராகேஷ் என்பவர் நரேஷ் தனக்கு தரவேண்டிய ரூ. 7 லட்சத்தை கேட்டு தொந்தரவு செய்து வந்தார்.

ராகேஷை அணுகிய நரேஷ் தனது சகோதரரை கொலை செய்ய ஒத்துழைத்தால் கடன் தொகையுடன் மேலும் கூடுதலாக ரூ.13 லட்சம் தருவதாக தெரிவித்தார். இதேபோல் தன்னிடம் வேலை செய்யும் லாரி டிரைவர் பிரதீப்பை அணுகி அவருக்கு ரூ.2 லட்சம் தருவதாக ஒப்பந்தம் செய்தனர்.

கடந்த 29-ந்தேதி லாரி டிரைவர் பிரதீப், நரேஷ்க்கு போன் செய்து லாரி புறநகரில் இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து நரேஷ் தனது சகோதரர் வெங்கடேஷை பைக்கில் லாரி இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார்.

பின்னர் வெங்கடேஷை லாரி சக்கரத்திற்கு அடியில் படுக்க வைத்து லாரியை முன்னோக்கி இயக்கினர். லாரியின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி வெங்கடேஷ் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே இறந்தார்.

மறுநாள் காலை சகோதரர் லாரி மோதி இறந்து விட்டதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வெங்கடேஷ் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காப்பீட்டு நிறுவன பிரதிநிதிகள் நேற்று நரேஷிடம் விபத்து எப்படி ஏற்பட்டது என கேள்வி எழுப்பினர்.

அப்போது நரேஷ் விபத்து குறித்து கூறிய விதம் காப்பீட்டு நிறுவன பிரதிநிதிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். போலீசார் நரேஷை பிடித்து விசாரணை செய்தபோது கொலை குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து நரேஷ், ராகேஷ், பிரதீப் ஆகியோரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News