இந்தியா

(கோப்பு படம்)

மகாராஷ்டிரா சட்டசபையில் 4ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்கிறார் ஏக்நாத் ஷிண்டே

Published On 2022-07-01 12:38 GMT   |   Update On 2022-07-01 12:57 GMT
  • மகாராஷ்டிரா சட்டசபை சபாநாயகர் பதவிக்கு பாஜக எம்எல்ஏ வேட்புமனு தாக்கல்.
  • சட்டசபை கூட்டத் தொடரை நடத்துவது குறித்து ஏக்நாத் ஷிண்டே ஆலோசனை.

மகாராஷ்டிரா முதலமைச்சராக பதவியேற்றுள்ள சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் குழு தலைவர் ஏக்நாத் ஷிண்டே, வரும் 4ம் தேதி அம்மாநில சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்வார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

முன்னதாக அவர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் இரண்டு நாட்கள் சட்டசபை கூட்டத்தொடரை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் புதிய சபாநாயகர் தேர்வு மற்றும் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்நிலையில், மகாராஷ்டிரா சட்டசபை சபாநாயகர் பதவிக்கு பாஜக எம்எல்ஏ ராகுல் நர்வேக்கர் மனுத்தாக்கல் செய்துள்ளதாக அம்மாநில சட்டசபையை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சபாநாயகர் பதவிக்கு போட்டி இருந்தால் வரும் 3ம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 4ம் தேதி முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கூட்டணி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ள உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, தங்கள் அணியில் 170 எம்எல்ஏக்கள் உள்ளதாகவும், எங்களுக்கு பெரும்பான்மை பலம் இருக்கிறது என்றும் கூறினார்.

தமது ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரும் நாளை மும்பை வருவதாகவும், ஜூலை 3, 4 தேதிகளில் சட்டசபை கூட்டத்திற்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News