இந்தியா

திருப்பதி மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்

Published On 2023-12-21 04:09 GMT   |   Update On 2023-12-21 04:09 GMT
  • கடந்த 3 மாதங்களாக சிறுத்தை நடமாட்டம் இல்லாமல் இருந்தது.
  • கேமராக்களை ஆய்வு செய்தபோது லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் அருகே சிறுத்தை நடமாடுவதை உறுதி செய்தனர்.

திருமலை:

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் அலிபிரி நடைபாதையில் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் அருகே சிறுத்தைகள் நடமாட்டம் இருந்து வருகிறது.

ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு ஒரு சிறுமியை அடித்து கொன்றது. அதற்கு முன்பு ஒரு சிறுவன் படுகாயத்துடன் மீட்கப்பட்டான்.

இதனையடுத்து கூண்டுகள் வைத்து அடுத்தடுத்து 6 சிறுத்தைகள் பிடிக்கப்பட்டன. இதனால் கடந்த 3 மாதங்களாக சிறுத்தை நடமாட்டம் இல்லாமல் இருந்தது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக லட்சுமி நரசிம்ம சாமி சன்னதி அருகே உள்ள நடைபாதை அருகே அடிக்கடி மீண்டும் சிறுத்தை நடமாடுவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் கேமராக்களை ஆய்வு செய்தபோது லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் அருகே சிறுத்தை நடமாடுவதை உறுதி செய்தனர்.

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு முதல் பக்தர்களுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பக்தர்கள் தனியாக செல்லக்கூடாது, குழுவாக செல்லவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து பக்தர்களுக்கும் மீண்டும் மூங்கில் கம்பு வழங்கி வருகின்றனர்.

இதுதவிர 100 படிக்கட்டுகளுக்கு ஒரு போலீசார் மற்றும் வனத்துறையினர் கயிறு கட்டி தடுப்பு ஏற்படுத்தி முகாமிட்டுள்ளனர். அவர்கள் பக்தர்கள் தனியாக செல்லாதபடி கண்காணித்து 100 பேர் குழுவாக அமைக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர்.

சிறுவர், சிறுமிகளை அழைத்துச்செல்லும்போது மிக கவனமாக இருக்க வேண்டும் எனவும், மலைப்பாதையில் வனத்துறையினர் மற்றும் போலீசார் மைக் மூலம் அறிவுறுத்தி வருகின்றனர்.

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசியொட்டி நாளை முதல் 9 இடங்களில் பக்தர்களுக்கு தரிசன டோக்கன்கள் வழங்கப்படுகிறது. அதனை பெற்று நேரடியாக சாமி தரிசனத்திற்கு செல்ல வேண்டும்.

இதன் மூலம் விரைவாக தரிசனம் செய்யலாம். டோக்கன் தீரும் வரை பக்தர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்துள்ளனர்.

இன்று இலவச தரிசனத்தில் 10 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News