இந்தியா

லடாக் GEN Z போராட்டம்: செயல்பாட்டாளர் சோனம் வாங்சுக் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது

Published On 2025-09-26 16:35 IST   |   Update On 2025-09-26 16:35:00 IST
  • செப்டம்பர் 10 முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்தார்.
  • நேபாள 'ஜென் இசட்' போராட்டங்களைப் பற்றி அவர் பேசியது வன்முறையைத் தூண்டியதாக அமைச்சகம் கூறியுள்ளது.

லடாக் யூனியன் பிரதேசத்திற்கு தனி மாநில அந்தஸ்து மற்றும் அரசியலமைப்பின் 6-வது அட்டவணையில் சேர்க்கக் கோரி சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் சோனம் வாங்சுக் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இதற்கிடையே அவர்களுக்கு ஆதரவாக கடந்த புதன்கிழமை லே-வில் நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டம் வன்முறையாக மாறியது.

அங்கு போராட்டத்தில் அதிகளவில் பங்கேற்ற இளைஞர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் நான்கு பேர் உயிரிழந்தனர் மற்றும் 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

போராட்டக்காரர்கள் காவல்துறை வாகனங்களுக்குத் தீ வைத்ததுடன், லே-வில் உள்ள பாஜக அலுவலகத்தையும் தாக்கினர்.

செப்டம்பர் 10 முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த சோனம் வாங்க்சுக், வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து இளைஞர்கள் அமைதிக்காக வேண்டும் என்று கூறி தனது போராட்டத்தை நிறுத்திக்கொண்டார்.

வன்முறைக்குக் காரணம் வாங்க்சுக்கின் "தூண்டுதல் பேச்சுகளே" என்று மத்திய உள்துறை அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.

அரபு வசந்தம் மற்றும் நேபாள 'ஜென் இசட்' போராட்டங்களைப் பற்றி அவர் பேசியது வன்முறையைத் தூண்டியதாக அமைச்சகம் கூறியுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகளை வாங்க்சுக் கடுமையாக மறுத்துள்ளார். இப்பிரச்சனையின் மூல காரணிகளைத் தீர்க்காமல் பலிகடா தேடும் தந்திரமாகவே மத்திய அரசு தன்னைக் குறிவைப்பதாக அவர் விமர்சித்துள்ளார்.

இந்நிலையில் வன்முறையைத் தூண்டியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் இன்று சோனம் வாங்க்சுக் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் (NSA) கீழ் கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையே வாங்க்சுக் நிறுவிய SECMOL என்ற  அரசு சாரா நிறுவனத்தின் FCRA (வெளிநாட்டுப் பங்களிப்பு) உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. 

Tags:    

Similar News