இந்தியா

டொமினிக் மார்ட்டின்

கேரள குண்டுவெடிப்பு: சதிச்செயலில் ஈடுபட்டவரின் வெளிநாட்டு தொடர்பு பற்றி என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை

Published On 2023-10-31 11:16 IST   |   Update On 2023-10-31 11:16:00 IST
  • பிரார்த்தனையில் பங்கேற்றிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு பயத்தில் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள்.
  • டொமினிக் மார்ட்டினிடம் தொடர்ந்து 29 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் உள்ள ஜம்ரா என்கிற சர்வதேச மாநாட்டு மையத்தில் யெகோவாவின் சாட்சிகள் என்ற கிறிஸ்தவ சபையினரின் ஜெபக்கூட்டம் கடந்த 27-ந்தேதி தொடங்கி நடந்து வந்தது.

கூட்டத்தின் 3-ம் நாளான நேற்று முன்தினம் நடந்தது. அதில் 2ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றிருந்தனர். இந்நிலையில் பிரார்த்தனை நடந்துகொண்டிருந்தபோது மாநாட்டு மைய அரங்கில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதனால் பிரார்த்தனை நடந்த மையத்தில் தீப்பிடித்து எரிந்தது.

பிரார்த்தனையில் பங்கேற்றிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு பயத்தில் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இந்த குண்டு வெடிப்பில் இரிங்கோல் பகுதியை சேர்ந்த லியோனா பவுலோஸ்(வயது45) என்ற பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.

அவர்கள் களமச்சேரி அரசு ஆஸ்பத்திரி மற்றும் அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இடுக்கி மாவட்டம் தொடுபுழா பகுதியை சேர்ந்த குமாரி(53) என்ற பெண்ணும், லிபினா என்ற 12 வயது சிறுமியும் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதனால் குண்டு வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் வெடிகுண்டுகள் வெடித்த சம்பவத்தை தொடர்ந்து கேரள மாநிலம் முழுவதும் பதட்டம் ஏற்பட்டது.

குண்டுவெடிப்பு நடந்து முடிந்த சிறிது நேரத்திலேயே, குண்டுவெடிப்பை நிகழ்த்தியதாக கூறி கொச்சியை சேர்ந்த டொமினிக் மார்ட்டின் என்பவர் சமூக வலைதளங்களில் வீடியோவை வெளியிட்டார். மேலும் அவர் கொடகரா போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.

அவரிடம் போலீசார் மட்டுமின்றி, என்.ஐ.ஏ., மத்திய பாதுகாப்பு படை, பயங்கரவாத எதிர்ப்பு படை உள்ளிட்டவைகளை சேர்ந்த அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது யெகோவாவின் சாட்சிகள் கிறிஸ்தவ சபையில் ஊழியராக பணிபுரிந்ததாகவும், அந்த சபையின் நடவடிக்கை பிடிக்காததால் அதிலிருந்து வெளியே வந்து விட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும் அந்த சபையின் செயல்பாட்டை நிறுத்துமாறு பலமுறை எச்சரித்தும் அவர்கள் தங்களது நடவடிக்கையை தொடர்ந்ததால், அவர்கள் நடத்திய பிரார்த்தனை கூட்டத்தில் திட்டமிட்டு வெடிகுண்டுகளை வைத்து வெடிக்க செய்ததாகவும் அவர் கூறினார்.

வெடிகுண்டுகளை தயாரிப்பதற்கான வெடிமருந்து உள்ளிட்ட மூலப்பொருட்களை கொச்சியில் பல இடங்களில் வாங்கியதாகவும், பின்பு யூ-டியூப்பை பார்த்து எலெக்ட்ரிக் டெட்டனெட்டர் தயாரிப்பை தெரிந்துகொண்டு வெடிகுண்டுகளை தனது வீட்டின் மாடியில் வைத்து தயாரித்ததாக தெரிவித்திருக்கிறார்.

மேலும் தயாரித்த வெடிகுண்டுகளை நேற்றுமுன்தினம் காலை பிரார்த்தனை நடந்த இடத்திற்கு கொண்டு சென்று வைத்து, திட்டமிட்டபடி குண்டுகளை வெடிக்கச் செய்ததாக தெரிவித்திருக்கிறார். அதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் டொமினிக் மார்ட்டினை கைது செய்தனர்.

அவர் மீது உபா சட்டம், கொலை, கொலை முயற்சி, வெடிமருந்து தடை சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு உள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் வேறு யாருக்கு தொடர்பு உள்ளதா? என்பது பற்றி கைது செய்யப்பட்ட டொமினிக் மார்ட்டினிடம் என்ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.

ஆனால், தான் மட்டுமே இந்த சதிச்செயலில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. அவர் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் அவர் வெடிபொருட்கள் வாங்கிய இடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

டொமினிக் மார்ட்டினிடம் தொடர்ந்து 29 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து அவர் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்டார்.

டொமினிக் மார்ட்டின் சிறையில் அடைக்கப்பட்ட போதிலும், குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். டொமினிக் மார்ட்டின் வெளிநாட்டில் அதிக நாட்கள் இருந்திருப்பதால், அவருடனான வெளிநாட்டு தொடர்ப்பு பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அவர் யார் யாருடன் பழகி வந்தார்? வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த பிறகு யாருடன் தொடர்பில் இருந்தார்? பயங்கரவாத கும்பலுடன் தொடர்பில் இருந்தாரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் மேலும் பல தகவல்கள் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களில் 21 பேர் ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 16 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

அந்த 16 பேரில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News