கிறிஸ்தவ அரங்கில் வெடித்தது டிபன்பாக்ஸ் குண்டு: என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணையில் கண்டுபிடிப்பு
- ஐ.இ.டி. வகை குண்டு நாச வேலைக்கு பயன்படுத்தப்பட்டிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
- கேரள போலீசாரும், என்.ஐ.ஏ. அதிகாரிகளும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
கேரளா மாநிலம் கொச்சியில் கிறிஸ்தவ கூட்டரங்கில் குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் டிபன் பாக்ஸ் குண்டு வெடித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் ஆய்வு செய்த வெடிகுண்டு நிபுணர்களும், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும் இந்த வகை குண்டை கண்டுபிடித்திருக்கிறார்கள்.
இதன் மூலம் கேரளாவில் பயங்கரவாதிகள் நாச வேலையில் ஈடுபட வேண்டும் என்கிற சதி திட்டத்துடன் அங்கு முன்கூட்டியே முகாமிட்டு குண்டுவெடிப்பு சம்பவத்தை அரங்கேற்றி இருக்கலாம் என்றே கருதப்படுகிறது. தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களை சேர்ந்தவர்கள் டிபன்பாக்ஸ் குண்டை வெடிக்க செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதையடுத்து இதற்கு முன்பு நடைபெற்ற டிபன் பாக்ஸ் குண்டு வெடிப்பு சம்பவங்களின் பின்னணி குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஐ.இ.டி. வகை குண்டு நாச வேலைக்கு பயன்படுத்தப்பட்டிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வகை குண்டுகள் வீட்டிலேயே தயாரிக்கப்படுபவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து குண்டு வைத்தவர்கள் கேரளாவில் முகாமிட்டு அங்கேயே வெடிகுண்டை தயாரித்தார்களா? இல்லை வேறு பகுதியில் வெடிகுண்டை தயாரித்து அதனை கேரளாவுக்கு எடுத்துச் சென்று வெடிக்க செய்தார்களா? என்கிற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாகவும் கேரள போலீசாரும், என்.ஐ.ஏ. அதிகாரிகளும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
குண்டுவெடிப்பு நடைபெற்ற சில மணி நேரங்களிலேயே அது எந்த வகை குண்டு என்பதை கண்டறிந்துள்ள அதிகாரிகள் சதி திட்டத்தில் ஈடுபட்டவர்களை கூண்டோடு பிடிக்க வலை விரித்துள்ளனர்.