இது 2027-ம் ஆண்டுக்கான அரையிறுதி: இடைத்தேர்தல் வெற்றி குறித்து கெஜ்ரிவால்
- சமீபத்தில் 5 சட்டசபைத் தொகுதிகளுக்கு ஜூன் 19 அன்று இடைத்தேர்தல் நடந்தது.
- இந்த இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
புதுடெல்லி:
குஜராத், கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள 5 சட்டசபைத் தொகுதிகளுக்கு ஜூன் 19 அன்று இடைத்தேர்தல் நடந்தது. இந்த இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக, காங்கிரஸ், டிஎம்சி ஆகியவை தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்றன.
இந்நிலையில், குஜராத் மற்றும் பஞ்சாப் சட்டசபை இடைத்தேர்தலில் பெற்ற வெற்றி குறித்து ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:
குஜராத் மற்றும் பஞ்சாப் இடைத்தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாபின் லூதியானா மேற்கு சட்டசபைத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் எங்கள் வேட்பாளர் சஞ்சீவ் அரோரா வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் பஞ்சாப் மக்கள் ஆம் ஆத்மி மீதான தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.
குஜராத்தின் விசாவதார் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளரும், கட்சியின் முன்னாள் மாநில தலைவருமான கோபால் இத்தாலியா வெற்றி பெற்றுள்ளார். குஜராத் மக்கள் இப்போது பா.ஜ.க. மீது வெறுப்படைந்து, ஆம் ஆத்மி கட்சிமீது நம்பிக்கையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
பஞ்சாபிலும், குஜராத்திலும் ஆம் ஆத்மியை தோற்கடிக்க காங்கிரசும், பா.ஜ.க.வும் முயன்றன. ஆனால், மக்கள் அவர்களை நிராகரித்துள்ளனர்.
2027-ம் ஆண்டில் பஞ்சாப், குஜராத் ஆகிய இரு மாநிலங்களிலும் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. சிலர் இது 2027-க்கான அரையிறுதி என கூறுகிறார்கள். 2027-ல் ஆம் ஆத்மி கட்சியின் புயல் வீசும். குஜராத்தைப் பொறுத்தவரை 2027 தேர்தல் போட்டி என்பது பா.ஜ.க-ஆம் ஆத்மி கட்சி இடையேதான் இருக்கும் என தெரிவித்தார்.