இந்தியா

காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சி: தமிழகத்தில் இருந்து 2 ஆயிரம் மாணவர்கள் வாரணாசி செல்ல ஏற்பாடு

Published On 2022-11-10 08:59 IST   |   Update On 2022-11-10 08:59:00 IST
  • ‘காசி-தமிழ் சங்கமம்’ என்ற பெயரில் வாரணாசியில் ஒரு மாத கால நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
  • மாணவர்களுக்கான ரெயில் கட்டணத்தை அரசே செலுத்தவும் ஏற்பாடாகி வருகிறது.

புதுடெல்லி:

தமிழகத்துக்கும், வாரணாசிக்கும் (காசி) இடையேயான பழங்கால தொடர்பை மீட்டெடுத்து வலுப்படுத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக 'காசி-தமிழ் சங்கமம்' என்ற பெயரில் வாரணாசியில் ஒரு மாத கால நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வருகிற 16-ந் தேதி முதல் அடுத்த மாதம் (டிசம்பர்) 19-ந் தேதி வரை நடைபெறும் இந்த காசி-தமிழ் சங்கமத்தில் கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள், கலாசார நிகழ்வுகள், கலை நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

மத்திய கல்வி அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட சாமு கிருஷ்ண சாஸ்திரி தலைமையிலான பாரதிய பாஷா சமிதி, இந்த நிகழ்ச்சிக்கான பரிந்துரையை வழங்கி ஏற்பாடு செய்துள்ளது.

இரண்டு அறிவு மற்றும் கலாசார மரபுகளை நெருக்கமாக கொண்டுவருதல், நமது பகிரப்பட்ட பாரம்பரியத்தை பற்றிய புரிதலை உருவாக்குதல் மற்றும் இரு பிராந்தியங்களை சேர்ந்த மக்களுக்கு இடையேயான பிணைப்பை ஆழமாக்குதலே இந்த நிகழ்ச்சியின் நோக்கம் என மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியிருந்தார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோரை பங்கேற்க செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. குறிப்பாக தமிழகத்தின் பல்வேறு பல்கலைக்கழங்களில் பயின்று வரும் பல்வேறு துறைகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்களை காசிக்கு அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதற்காக ரெயில்களில் சிறப்பு பெட்டிகளை இணைக்க ரெயில்வே நடவடிக்கை எடுத்து உள்ளது. மாணவர்களுக்கான ரெயில் கட்டணத்தை அரசே செலுத்தவும் ஏற்பாடாகி வருகிறது.

இதைப்போல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 200 பேர் கொண்ட பல்வேறு குழுக்களை காசிக்கு அழைத்து செல்லவும் ஏற்பாடுகள் நடந்து வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

Tags:    

Similar News