இந்தியா

வீடியோவில் பணம் குறித்து என் மகன் பேசி இருந்தால் அரசியலை விட்டு விலகுகிறேன்: சித்தராமையா சவால்

Published On 2023-11-17 12:58 IST   |   Update On 2023-11-17 12:58:00 IST
  • பணியிட மாற்றம் குறித்து யதீந்திரா பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.
  • 5 மாநில சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக இங்குள்ள காங்கிரஸ் தலைவர்கள் பண மூட்டையுடன் செல்கிறார்கள்.

பெங்களூரு:

கர்நாடகவில் பணியிட மாற்றம் தொடர்பாக முதல்-மந்திரி சித்தராமையாவின் மகன் யதீந்திரா பேசிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுதொடர்பாக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-மந்திரி சித்தராமையா, அவரது மகன் யதீந்திரா ஆகியோரும், முதல்-மந்திரி அலுவலக அதிகாரிகளும் பணியிட மாற்றத்தில் மூழ்கியுள்ளனர். இதில் பண பரிமாற்றம் நடக்கிறது. இதுகுறித்து நான் ஏற்கனவே பலமுறை குற்றம்சாட்டினேன். அது தற்போது நிரூபணம் ஆகியுள்ளது. பணியிட மாற்றம் குறித்து யதீந்திரா பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.

யதீந்திராவுக்கு போன் செய்தது யார்?, அப்பா என்று யாரை சொன்னார்?, விவேகானந்தா யார்?. மகாதேவிடம் போனை கொடுங்கள் என்று கூறியது ஏன்?. இதில் 'சூப்பர் சி.எம்.' யார்?. இதில் பணியிட மாற்ற விஷயம் இருக்கிறது. இதுகுறித்து உயர்மட்ட விசாரணை நடைபெற வேண்டும். தந்தை-மகன் இடையே நடைபெற்ற போன் உரையாடல் குறித்து மக்களுக்கு தெரிய வேண்டும். முதல்-மந்திரி சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும்.

எம்.எல்.ஏ. ஒருவரின் பரிந்துரை கடிதத்தை எடுத்து வந்தவரிடம் ரூ.30 லட்சம் லஞ்சம் கேட்டவர்கள் இவர்கள். அந்த நபர் குறித்து நானே கூறினேன். 5 மாநில சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக இங்குள்ள காங்கிரஸ் தலைவர்கள் பண மூட்டையுடன் செல்கிறார்கள். 'ஹிட் அன்ட் ரன்' என்று என்னை குறை சொல்கிறார்கள். ஆனால் தற்போது வீடியோ ஆதாரமே வெளியாகியுள்ளது. இதற்கு என்ன சொல்கிறார்கள்?.

காங்கிரசில் உள்ள சிறிய தலைவர்கள் கூட என்னை பற்றி விமர்சித்து பேசினர். இப்போது அவர்கள் என்ன சொல்கிறார்கள்?. என்னை மின்சார திருடன் என்று காங்கிரசார் சொல்கிறார்கள். மின்சாரத்தை திருடும் அளவுக்கு எனக்கு தரித்திரம் இல்லை. யாரோ செய்த தவறுக்கு நான் பொறுப்பேற்று வருத்தம் தெரிவித்தேன். ஆனால் காங்கிரசார் என்னை அவமதிக்கும் வகையில் சுவரொட்டிகளை ஒட்டினர்.

கர்நாடகாவில் முதல்-மந்திரி சித்தராமையாவின் மகன் பேசிய வீடியோ குறித்து வெளிப்படைத்தன்மையோடு விசாரிக்க வேண்டும்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

இதற்கு பதில் அளித்து முதல்-மந்திரி சித்தராமையா கூறுகையில், தனது மகன் யதீந்திரா பணம் குறித்தோ, பணியிட மாற்றம் குறித்தோ பேசவில்லை. பணம் பெற்றுக்கொண்டு பணியிட மாற்றம் செய்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுகிறேன் என்று சவால் விட்டுள்ளார்.

Tags:    

Similar News