இந்தியா

சாலை கட்டுமான ஊழல் பற்றி கேள்வி கேட்ட பத்திரிகையாளர் செப்டிக் டேங்கில் சடலமாக மீட்பு

Published On 2025-01-04 11:23 IST   |   Update On 2025-01-04 11:25:00 IST
  • சாலை ஒப்பந்ததாரருக்கு சொந்தமான வளாகத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
  • பிஜப்பூரில் நடந்த சாலை கட்டுமான ஊழல் குறித்து செய்தி வெளியிட்டார்.

சத்தீஸ்கரை சேர்ந்த பிரபல பத்திரிகையாளர், முகேஷ் சந்திரகர் [33 வயது]. அம்மாநிலத்தில் மாவோயிட் மற்றும் அரசுக்கு இடையில் பழங்குடியினரின் பிரச்சனைகளை வெளிப்படுத்தி வந்த இவர் கடந்த புத்தாண்டு தினத்தன்று காணாமல் போனார்.

இந்நிலையில் நேற்று [வெள்ளிக்கிழமை] பிஜப்பூர் மாவட்டத்தில் அரசு சாலை ஒப்பந்ததாரருக்கு சொந்தமான வளாகத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இதனையடுத்து காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இந்த கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பீஜப்பூரில் பத்திரிகையாளர்கள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

என்டிடிவி உட்பட பல முன்னணி தொலைக்காட்சிகளுக்காக பணியாற்றிய முகேஷ், மாவோயிஸ்ட் ஆதிக்கம் நிறைந்த பஸ்தரில்  களத்தில் தீவிரமான செய்தி சேகரிப்பவராக அறியப்பட்டவர்.

ஏப்ரல் 2021 மாவோயிஸ்ட்டுகளால் கடத்தப்பட்ட கோப்ரா கமாண்டோவை அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விடுவிப்பதில் முகேஷ் முக்கிய பங்கு வகித்தார்.

முகேஷ் சமீபத்தில் பிஜப்பூரில் நடந்த அரசு சாலை கட்டுமான ஊழல் குறித்து செய்தி வெளியிட்டார். அதனைத்தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் மீது விசாரணை நடந்தது.  இந்த ரூ. 120 கோடி மதிப்பிலான பஸ்தர் சாலை கட்டுமானத் திட்டத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, ஒப்பந்ததாரர் சுரேஷ் என்பரிடம் சில நாட்களுக்கு முன் முகேஷ் எடுத்த பேட்டியில்   பல கேள்விகளை கேட்டிருந்தார்.   

இந்நிலையில் புத்தாண்டில் காணாமல் போன முகேஷ் கடைசியாக சென்ற இடம் சுரேஷின் குடியிருப்புப் பகுதி என சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தெரிய வந்தது. 

தொடர்ந்து, அந்த இடத்தில் சோதனை மேற்கொண்டதில் ஒரு  செப்டிக் டேங்கில் முகேஷ் சடலமாக கிடந்தார். இதனையடுத்து, அவரது உடலை மீட்ட காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.  இந்த வழக்கில்  சுரேஷின் சகோதரர் மட்டும் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவரது குடும்பத்தினர் தலைமறைவாக இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

பத்திரிகைத்துறையில் 10 ஆண்டுகளாக இயங்கி வரும் முகேஷ், பஸ்தர் ஜங்ஷன் என்ற 159,000 பின்தொடர்பவர்கள் கொன்ற யூடிபூப் சேனலையும் நடத்தி வந்தார். 

 

Full View
Tags:    

Similar News